பிஹார் தேர்தல்: புதிய சீர்திருத்தங்களை அறிவித்த தேர்தல் ஆணையம்
விரைவில் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பல புதிய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பிஹார் சட்டப்பேரவையின் தற்போதைய பதவிக்காலம் நவம்பர் 22-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து நவம்பரில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பிஹார் தேர்தலுக்கான புதிய சீர்திருத்தங்களை அறிவித்தார். அவர் கூறியதாவது:
“புதிய சீர்திருத்தங்களில் சில தேர்தல் நடைபெறும் நாளிலும், சில வாக்கு எண்ணிக்கையின்போதும் நடைமுறைக்கு வரும்.
- வாக்காளர் பதிவு செய்த 15 நாட்களுக்குள், வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் எஸ்ஓபி நடைமுறை அமலாகும்.
- வாக்குச் சாவடிகளில் மொபைல் போன்களை டெபாசிட் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.
- ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் மட்டுமே இருப்பார்கள் — இதன் மூலம் நீண்ட வரிசைகள் தவிர்க்கப்படும். இது நாட்டில் முதல்முறையாக நடைமுறைக்கு வருகிறது.
மேலும், மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் (EVM) வேட்பாளரின் வண்ணப் புகைப்படம் மற்றும் வரிசை எண்ணின் எழுத்துரு பெரியதாக இருக்கும். இதை நடைமுறைப்படுத்தும் முதல் மாநிலம் பிஹார் ஆகும்.
வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும் அடையாள அட்டையுடன் இருப்பார்கள். அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் காஸ்டிங் கவரேஜ் இருக்கும், இதன் மூலம் வாக்குப்பதிவு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கையின் போது, படிவம் 17சி மற்றும் EVM-இல் பதிவான வாக்குகள் இடையே வேறுபாடு இருந்தால், அந்த வாக்குகள் அனைத்தும் முழுமையாக மீண்டும் எண்ணப்பட வேண்டும் — இது ஏற்கெனவே நடைமுறையில் உள்ள விதிமுறையாகும்.
இந்த புதிய சீர்திருத்தங்கள் பிஹாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்,” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.