இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் இருநாள் அரசு முறை பயணமாக அக்டோபர் 8ஆம் தேதி இந்தியா வருகிறார். கடந்த ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பதால், இந்த விஜயம் இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை 23, 24 தேதிகளில் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றிருந்தபோது, இரு நாடுகளுக்குமிடையில் தாராள வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) கையெழுத்தானது. தற்போது 56 பில்லியன் டாலராக உள்ள இருதரப்பு வர்த்தகத்தை 2030க்குள் இரட்டிப்பாக்குவது அந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் 9ஆம் தேதி மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது, ‘விஷன் 2035’ எனப்படும் 10 ஆண்டு நீளமான கூட்டாண்மை திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆய்வு செய்வார்கள்.”

விஷன் 2035 திட்டம் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புதுமை, ராணுவம், பாதுகாப்பு, காலநிலை மாற்றம், எரிசக்தி, சுகாதாரம், கல்வி மற்றும் மக்கள் இடையிலான உறவு போன்ற துறைகளைக் கொண்டுள்ளது.

மேலும், வரும் அக்டோபர் 9ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள 6வது சர்வதேச நிதி தொழில்நுட்ப மாநாட்டில், மோடியும் ஸ்டார்மரும் சிறப்புரையாற்றவுள்ளனர்.

இந்த விஜயத்தின் மூலம் இந்தியா–இங்கிலாந்து உறவு புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box