“ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது” – தலைமை நீதிபதி மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார்.

பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் கூறியதாவது:

“இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாயுடன் நான் பேசினேன். இன்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது. நமது சமூகத்தில் இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயல்களுக்கு இடமில்லை. இது முற்றிலும் கண்டனத்துக்குரியது.

நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டினேன். இது நீதியின் மதிப்புகள் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதாகும்.”

சம்பவ விவரம்:

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வழக்கின் விசாரணையை தொடங்கியபோது, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணியை வீச முயன்றார். ஆனால் அமர்வின் முன்னாலேயே காலணி விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. காலணியை வீசிய ராகேஷ் கிஷோர் உடனடியாக நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். அவர் “சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது” என கூச்சலிட்டார். ராகேஷ் கிஷோர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

தலைமை நீதிபதி கவாய் அமைதியாக இருந்து இடையூறு இல்லாமல் நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தார். மேலும், “இதனால் எல்லாம் திசைதிருப்பப்பட வேண்டாம். இவை எல்லாம் என்னைப் பாதிக்காது, விசாரணையைத் தொடருங்கள்” என்றார்.

சம்பவத்துக்குப் பிறகு, கவாய் பொதுச் செயலாளர் மற்றும் பாதுகாப்புப் பொறுப்பாளர் உள்ளிட்ட நீதிமன்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். விசாரணையில் ராகேஷ் கிஷோர் 2011 முதல் வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர் என்று தெரியவந்தது.

பின்புலம்:

மத்தியப் பிரதேசத்தில் சேதமடைந்த விஷ்ணு சிலையை மீட்டெடுப்பது தொடர்பான தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிராக அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது. செப்டம்பரில், ஜவாரி கோயிலில் உள்ள 7 அடி விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரி மனுவை கவாய் தள்ளுபடி செய்தார். அவர் மனுதாரரிடம்,

“இது முற்றிலும் விளம்பர நோக்கம் கொண்ட வழக்கு. போய் இப்போது கடவுளிடம் ஏதாவது செய்யச் சொல்லுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொல்கிறீர்கள்; எனவே இப்போதே சென்று பிரார்த்தனை செய்யுங்கள்,” என்றார்.

சமூக ஊடகங்களில் இதற்கு எதிரான விமர்சனங்கள் பரவியதும், கவாய் தனது கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும் விளக்கமளித்தார்.

Facebook Comments Box