ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு குடியரசுத் தலைவர் முர்மு அக்.22-ல் வருகை

குடியரசுத் தலைவர் திராவுபதி முர்மு ஐயப்பனை தரிசிப்பதற்காக அக்டோபர் 22-ம் தேதி சபரிமலை வருகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 18-ம் தேதி துலாம் (ஐப்பசி) பிறப்பை முன்னிட்டு, 17-ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது.

ஐப்பசி மாத வழிபாட்டில் குடியரசுத் தலைவர் திராவுபதி முர்மு கலந்துகொண்டு ஐயப்பனை தரிசிக்க உள்ளார். அவர் ஏற்கெனவே மே மாதம் சபரிமலை வருவதாக இருந்த நிலையில், பம்பை, சந்நிதானம் போன்ற பகுதிகள் ராணுவ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் அப்போது நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர்நிலை காரணமாக அவர் சபரிமலைக்கு வர முடியவில்லை.

இந்நிலையில், இந்த மாதம் அவர் வர உள்ளதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவசம் போர்டு அமைச்சர் வி.என்.வாசன் கூறியதாவது, குடியரசுத் தலைவர் திராவுபதி முர்மு சபரிமலை வர உள்ளார். அவர் 22-ம் தேதி கொச்சி விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் நிலக்கல் வருவார். தொடர்ந்து கார் மூலம் பம்பை வந்து, நீலிமலை பாதை வழியாக நடந்து செல்ல உள்ளார். இருப்பினும் மாற்று ஏற்பாடாக வாகனம் மூலம் சந்நிதானம் செல்லும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களிடையே குழப்பம்: இதற்கிடையே பாதுகாப்பு காரணமாக அவர் வருகை தொடர்பான முழு விவரமும் தேவசம் போர்டுக்கு தரப்படவில்லை. குடியரசுத் தலைவர் வரும் நாளில் பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்களின் வருகை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் 17-ம் தேதி மட்டும் பக்தர்களின் தரிசனத்துக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த நாட்களில் தரிசன முன்பதிவுகளில் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Facebook Comments Box