பிஹார் தேர்தலில் போட்டியிட உள்ள 25 வயது நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாக்கூர்
பிரபல நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர், பிஹார் மாநிலத்தின் பெனிபட்டி தொகுதியில் இருந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நடைபெற்ற நர்மதா மஹோத்சவம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் சொந்த ஊரான பெனிபட்டி தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புகிறேன். என் கிராமப் பகுதியுடன் எனக்கு உள்ள நெருக்கம் காரணமாக அங்கிருந்து தொடங்குவது எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருக்கும். மக்களை நேரில் சந்தித்து பேசுவது போன்றவற்றை என் சொந்த ஊரிலிருந்தே ஆரம்பிக்க விரும்புகிறேன். இருப்பினும், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை,” என கூறினார்.
மதுபானி மாவட்டத்தில் உள்ள பெனிபட்டி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாஜக சார்ந்த மாநில அமைச்சர் வினோத் நாராயண் ஜா ஆவார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அவர் காங்கிரஸ் வேட்பாளர் பாவனா ஜாவை 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இத்தொகுதி பிராமணர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.
மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த மைதிலி தாக்கூர், சிறுவயதிலிருந்தே இசை உலகில் பிரபலமானவர். மைதிலி, போஜ்பூரி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பாடும் இவர் சமீபத்தில் தமிழ் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நான்கு வயதில் தனது தாத்தாவிடம் இசை கற்றுக்கொண்ட மைதிலி, 10 வயதில் இருந்து மேடை நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தார். பல்வேறு விருதுகளைப் பெற்ற இவர், சமீபத்தில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் பிஹார் பொறுப்பாளர் வினோத் தாவ்டே, மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோரைச் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து அவர் பாஜகவில் சேர்வார் எனவும், தேர்தலில் போட்டியிடுவார் எனவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், பிஹார் தேர்தலில் போட்டியிடும் தனது விருப்பத்தை மைதிலி தாக்கூர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது; வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறும்.