ஹரியானா மூத்த ஐபிஎஸ் அதிகாரி துப்பாக்கியால் தற்கொலை

ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், சண்டிகர் செக்டார் 11 இல்லத்தில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தார். இந்த சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர் மூத்த காவல் கண்காணிப்பாளர் கன்வர்தீப் கவுர் கூறுகையில், “இன்று மதியம் 1.30 மணியளவில் செக்டார் 11 காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. சம்பவ இடத்தை காவல் நிலைய அதிகாரி மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர். புரன் குமாரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்கொலைக் குறிப்பு அல்லது தடயங்கள் உள்ளதா என்பதற்காக மத்திய தடய அறிவியல் ஆய்வகக் குழு ஆய்வு நடத்தியுள்ளது. தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.

புரன் குமார் 2001 பேட்ச் அதிகாரியாக ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். இவர் கடந்த செப்டம்பர் 29 அன்று ரோஹ்தக்கின் சுனாரியாவில் உள்ள காவல் பயிற்சி மையத்தில் (PTC) பணியமர்த்தப்பட்டார். அவரது மனைவி அமன் பி. குமார் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார், தற்போது ஜப்பான் பயணத்தில் உள்ளார் மற்றும் நாளை இந்தியா திரும்புவார்.

கவனத்திற்கு: தற்கொலை பிரச்சினைக்கு தீர்வு அல்ல. தற்கொலை எண்ணம் வந்தால், தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். உதவி பெற சினேகா தொண்டு நிறுவனம் 044-24640060 அல்லது தமிழ்நாடு அரசு ஹெல்ப்லைன் 104-இல் தொடர்பு கொள்ளலாம்.

Facebook Comments Box