காசா அமைதித் திட்ட ஒப்பந்தம்: பிரதமர் மோடி வரவேற்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் காசாவுக்கான அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இந்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேலும், ஹமாஸும் காசாவில் சண்டையை நிறுத்த தீர்மானித்துள்ளன.

இதன்பற்றி பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

“அதிபர் ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது பிரதமர் நெதன்யாகுவின் வலுவான தலைமையின் பிரதிபலிப்பாகும். பணயக்கைதிகள் விடுதலை மற்றும் மேம்பட்ட மனிதாபிமான உதவி காசா மக்களுக்கு நிம்மதியை வழங்கி, நீடித்த அமைதிக்கு வழி வகுக்கும் என்று நம்புகிறோம்” என அவர் தெரிவித்தார்.

ட்ரம்ப் நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் படி, காசாவில் சண்டையை நிறுத்தி, பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளன. இரண்டு வருடங்களாக நீடித்த இஸ்ரேல்-ஹமாஸ் போரில், காசாவில் 60,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். இஸ்ரேல் தாக்குதலால் காசா நகரம் பெரும்பாலும் அழிந்து விட்டது.

முன்னதாக, ட்ரம்ப் தனது சமூகவலைதளப் பதிவில் கூறியதாவது:

“இஸ்ரேலும் ஹமாஸும் அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதை அறிவிப்பதில் நான் பெருமை அடைகிறேன். இதனால் அனைத்து பிணைக் கைதிகளும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். அமைதியை உருவாக்க, முதல்கட்ட ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் தனது பாதுகாப்பு படையினரை திரும்பப்பெறும். அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவர். அரபு, முஸ்லிம் நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இதை சிறந்த நாளாகக் கருதுகின்றன. இதற்காக கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். அமைதியை ஏற்படுத்தியவர்கள் பாக்கியவான்கள்” என ட்ரம்ப் குறிப்பிட்டார்.

Facebook Comments Box