இந்தியாவில் 9 பிரிட்டன் பல்கலைக்கழக வளாகங்கள் – பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் அறிவிப்பு
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன்பது முன்னணி பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்க உள்ளதாக அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் அறிவித்துள்ளார்.
இரண்டு நாள் இந்திய பயணமாக நேற்று வந்த ஸ்டார்மெர், மும்பையில் நடைபெற்ற இந்தியா–இங்கிலாந்து வணிகத் தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்றார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் போது, இரு நாடுகளின் உயர் மட்ட குழுவினரும் கலந்துரையாடினர்.
இந்தக் கூட்டத்தில், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றபோது கையெழுத்தான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) அடிப்படையில், இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்டார்மெர், சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் உட்பட 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களை நிறுவுகின்றன என்று கூறினார்.
ஏற்கனவே, சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் வளாகத்தைத் தொடங்கியுள்ளது, அங்கு முதல் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இதனுடன், லிவர்பூல் பல்கலைக்கழகம் பெங்களூருவிலும், யார்க் பல்கலைக்கழகம் மும்பையிலும் வளாகங்களை திறக்கவுள்ளன. அபெர்டீன் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகங்களும் மும்பையில் தங்கள் வளாகங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.
மேலும், லான்காஸ்டர் மற்றும் சர்ரே பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் வளாகங்களைத் தொடங்க அனுமதி பெற்றுள்ளன. இவை அடுத்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி, இந்திய மாணவர்கள் வெளிநாடு செல்லாமல் உலகத் தரத்தில் கல்வி பெறும் வகையில் முன்னெடுக்கப்பட்டதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.