காபூலில் இந்தியத் தூதரகம் மீண்டும் திறக்கப்படும் – ஜெய்சங்கர் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கான முடிவை வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.

ஆறு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாகி, புதுதில்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்த சந்திப்பில் பேசிய ஜெய்சங்கர், “ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்துக்கு இந்தியா முழுமையாக இணங்கியுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு, ஆப்கானிஸ்தானின் முன்னேற்றத்துக்கும் நிலைத்தன்மைக்கும் உதவுகிறது. இதை மேலும் வலுப்படுத்தும் வகையில், காபூலில் உள்ள இந்திய தொழில்நுட்ப அலுவலகத்தை தூதரக அந்தஸ்துக்கு உயர்த்த உள்ளோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:

“இரு நாடுகளும் வளர்ச்சி மற்றும் செழிப்பை நோக்கி ஒரே இலக்கில் செயல்படுகின்றன. ஆனால் எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இவற்றை சவாலாக மாற்றுகின்றன. எனவே, இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக இணைந்து செயல்படுவது அவசியம்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலை ஆப்கானிஸ்தான் கண்டித்தது. இந்தியாவின் பாதுகாப்பு குறித்த அவர்களின் அக்கறையை நாங்கள் மதிக்கிறோம். கடந்த ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு புதிய விசா தொகுதியை அறிமுகப்படுத்தி, மருத்துவம், வணிகம் மற்றும் கல்விக்கான விசாக்களை இந்தியா அதிகமாக வழங்கி வருகிறது.

பாகிஸ்தானில் இருந்து ஆப்கன் அகதிகளை அந்நாடு திருப்பி அனுப்புவது கவலை அளிக்கிறது. அவர்களுக்கான குடியிருப்புகள், வாழ்க்கை மறுகட்டமைப்பு போன்றவற்றில் இந்தியா தொடர்ந்து உதவும்.

ஆப்கானிஸ்தான் நம் அண்டை நாடு; அதன் வளர்ச்சியில் இந்தியா ஆழ்ந்த ஆர்வம் கொண்டுள்ளது. சுகாதாரத்துறையில் ஆறு புதிய திட்டங்களை இந்தியா தொடங்க உள்ளது; அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும், கிழக்கு ஆப்கானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளும் தொடர்ந்து நடக்கும்,” என்று தெரிவித்தார்.

2021க்குமுன்பு, காபூலில் தூதரகம் மற்றும் மசார்-இ-ஷெரீப், கந்தஹார், ஜலாலாபாத், ஹெராத் ஆகிய நகரங்களில் துணை தூதரகங்களையும் இந்தியா இயக்கி வந்தது. தற்போது காபூல் தூதரகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர இந்தியா திட்டமிட்டுள்ளது. இருப்பினும், அதன் துவக்க தேதி குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் எந்த உறுதியையும் வழங்கவில்லை.

Facebook Comments Box