ஹவாலா பணம் ரூ.1.45 கோடி அபகரிப்பு – ம.பி. மாநில காவலர்கள் 9 பேர் பணிநீக்கம்

மத்திய பிரதேச மாநிலத்தின் சிலாதேஹி வனப்பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையின் போது, காவலர்கள் குழு ஹவாலா பணத்தை அபகரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நேரத்தில் பந்தோல் காவல் நிலையத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் அர்பித் பைராம் தலைமையிலான போலீஸார் ஒரு நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில், அந்த வாகனம் மத்தியப் பிரதேசத்தின் கட்னி பகுதியில் இருந்து மகாராஷ்டிராவின் ஜல்னா நோக்கி பெரிய அளவில் பணம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

ஹவாலா பணம் என சந்தேகித்த காவலர்கள், அதனை பறிமுதல் செய்வதற்குப் பதிலாக, வாகன ஓட்டுநரை தாக்கி அங்கிருந்து விரட்டிவிட்டு, அந்த பணத்தை தாங்களே அபகரித்தனர் என கூறப்படுகிறது.

பணம் அனுப்பிய தொழிலதிபரும், ஓட்டுநரும் போலீஸில் புகார் அளித்ததை அடுத்து, மத்திய பிரதேச ஐ.ஜி ப்ரமோத் வர்மா விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் பின்னர், பந்தோல் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட மொத்தம் 9 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் காவலர்கள் அபகரித்த தொகை ரூ.1.45 கோடி என தெரியவந்துள்ளது. ஆனால், அந்த வாகனத்தில் ஆரம்பத்தில் இருந்தது ரூ.2.96 கோடிக்கும் மேலானது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments Box