மேற்கு வங்கத்தில் ஒடிசாவைச் சேர்ந்த மருத்துவ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை — காவல் துறை தீவிர விசாரணை
மேற்கு வங்கத்தின் பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள துர்காபூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஒடிசாவைச் சேர்ந்த ஒரு மாணவி, அடையாளம் தெரியாத நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் ஜலேஸ்வர் பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) இரவு தனது நண்பருடன் இரவு உணவு உண்ண கல்லூரி வளாகத்திலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது மூன்று பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களைத் தாக்கி, மாணவியை கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது. காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
“மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடந்த நேரம் இரவு 8 மணி முதல் 8.30 மணிக்குள் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியுடன் இருந்த நண்பரின் வாக்குமூலமும் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்து வருகிறோம். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.”
இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் (NCW) தீவிர கவனம் செலுத்தியுள்ளது. ஆணையத்தின் உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார் கூறியதாவது:
“மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. காவல் துறை முன்கூட்டியே எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலைக்குரியது. இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இந்நிலையில், மாநில சுகாதாரத்துறை, சம்பவம் தொடர்பாக துர்காபூர் தனியார் மருத்துவக் கல்லூரியிடமிருந்து விரிவான அறிக்கை கோரியுள்ளது. “அறிக்கையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.