லைப் பாய், பியர்ஸ், டவ், லக்ஸ், பாண்ட்ஸ், குளோஸ் அப், பெப்சோடென்ட், சர்ப் எக்செல், ரின், விம், புரூ காப்பி, புரூக் பாண்ட் தேநீர் உள்ளிட்ட பல்வேறு பிரபல நுகர்வோர் பிராண்டுகளை உருவாக்கும் நிறுவனமாக இந்துஸ்தான் யுனிலீவர் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநரும் (Managing Director), தலைமைச் செயல் அதிகாரியுமான (CEO) ரோஹித் ஜாவா, தனது பதவியை ஜூலை 31ஆம் தேதி விலகுகிறார். அவருக்கு மாற்றாக, பிரியா நாயர், நிறுவனத்தின் புதிய எம்.டி மற்றும் சிஇஓயாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், இந்துஸ்தான் யுனிலீவரின் வரலாற்றில் முதல்முறையாக பெண் தலைமை செயல் அதிகாரியாக உயர்கிறார்.
மேலும், பிரியா நாயர் தற்போது வீட்டுப் பராமரிப்பு, அழகு மற்றும் நல்வாழ்வு சார்ந்த பொருட்களின் விற்பனை, சந்தைப்படுத்தல் பொறுப்புகளை வகித்து வருகிறார். தற்போது, நிறுவனத்தின் போர்டு உறுப்பினராகவும் இணைந்து செயல்படவுள்ளார்.
இதுகுறித்து இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தலைவர் நிதின் பரன்ஜிபே,
“பிரியா நாயர், எங்கள் நிறுவன வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கியவர். இந்திய சந்தையை ஆழமாகப் புரிந்துள்ளவர். அவரது தலைமைப் பணிகள் நிறுவனத்துக்கு புதிய உயரங்களைத் தரும் என நம்புகிறோம்,” எனக் குறிப்பிட்டார்.
பிரியா நாயர், மகாராஷ்டிராவின் கோல்காபூர் நகரத்தில் பிறந்தவர். ஆனால், அவரின் பேற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.