இந்தியாவில் டெஸ்லாவின் ‘மாடல் ஒய்’ கார்கள் அறிமுகம் – விலை விவரமும், சிறப்பம்சங்களும்!
மும்பையில் டெஸ்லா நிறுவனம் தனது முதல் ஷோரூமை திறந்துவைத்து, இந்தியா சந்தையில் தனது வர்த்தக வரவைக் குறிப்பிடத்தக்க வகையில் பதிவு செய்துள்ளது. உலகளாவிய தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம், ‘மாடல் ஒய்’ என்ற மின்சார வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

2003-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரியாக எலான் மஸ்க் பணி செய்து வருகிறார். உலகின் பல்வேறு பகுதிகளில் மின்சார வாகனங்களை வெற்றிகரமாக விற்பனை செய்து வரும் இந்நிறுவனம், தற்போது இந்திய சந்தையையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட ஆரம்பித்துள்ளது.

அனைத்து முன்னணி நிறுவனங்களும் இந்தியாவில் தங்கள் தயாரிப்புகளை அறிமுகம் செய்ய ஆர்வமாக இருக்கின்றன. இந்த வரிசையில் எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனத்தையும், ஸ்டார்லிங்க் என்ற தன் உயர் வேக இணைய சேவையையும் இந்தியாவில் கொண்டு வர முனைந்தார். தற்போது டெஸ்லா கார் விற்பனை தொடங்கி, அந்த கனவு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியாவின் வாகன சந்தை நிலை

உலகளாவிய அளவில் கார்களின் விற்பனை அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையை பிழையாமல் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது டெஸ்லா. மேலும், ஸ்டார்லிங்க் இணைய சேவையும் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, இந்தியா முழுவதும் இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திர வாகனங்களுக்கே அதிகப்படியான தேவை உள்ளது. எனினும், எதிர்காலத்தில் மின்சார வாகனங்களுக்கு மாற்றம் ஏற்படும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். வாகன விற்பனை மற்றும் பயனர்களின் பழக்கத்தில் ஏற்பட்டுவரும் மாற்றம் இதற்கு சான்றாகும். இதனை ஒட்டியே டெஸ்லா இந்திய சந்தையில் தனது இடத்தை பிடிக்க முனைந்துள்ளது.

பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற வெளிநாட்டு பிராண்டுகள், மற்றும் மஹிந்திரா, டாடா போன்ற இந்திய நிறுவனங்களும் மின்சார வாகன துறையில் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் டெஸ்லா, இந்த போட்டியில் தன்னை நிலைநிறுத்த வேண்டும்.

டெஸ்லாவின் ‘மாடல் ஒய்’ கார்கள்: முக்கிய அம்சங்கள்

இந்தியாவில் அறிமுகமான டெஸ்லாவின் ‘மாடல் ஒய்’ கார்கள் இரு பதிப்புகளில் வந்துள்ளன:

  1. மாடல் ஒய் – ரியர் வீல் டிரைவ் (Rear-Wheel Drive)
    • அதிகபட்ச வேகம்: மணிக்கு 201 கி.மீ.
    • 0-100 கி.மீ வேகம்: 5.9 விநாடிகளில்
    • ஓரே சார்ஜில் பயணிக்கும் தூரம்: 500 கி.மீ.
    • 15 நிமிடத்தில் வேகமாக சார்ஜ் செய்யும் “சூப்பர் சார்ஜிங்” வசதி
    • ஆரம்ப ஷோரூம் விலை: ரூ.59.89 லட்சம்
    • 5 பேர் வரை பயணிக்கக் கூடிய இட வசதி
  2. மாடல் ஒய் – லாங் ரேஞ்ச் ஆர்.டபிள்யூ.டி (Long Range RWD)
    • அதிகபட்ச வேகம்: மணிக்கு 201 கி.மீ.
    • 0-100 கி.மீ வேகம்: 5.6 விநாடிகளில்
    • ஓரே சார்ஜில் செல்லக்கூடிய தூரம்: 622 கி.மீ (பெரிய பேட்டரியின் காரணமாக)
    • ஆரம்ப விலை: ரூ.67.89 லட்சம்

இரு மாடல்களுக்கும் பொதுவான அம்சங்கள்

  • 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய இசை அமைப்பு
  • 15.4 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்ட முன்னிலை டிஸ்பிளே
  • 8 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்ட இரண்டாம் வரிசை டிஸ்பிளே
  • ஆம்பியன்ட் லைட்டிங் அமைப்புகள்
  • 8 வெளிப்புற கேமராக்கள்
  • சென்ட்ரி மோட் உடன் இணைக்கப்பட்ட டாஷ்கேம் வசதி
  • முதல் வரிசை இருக்கைகளில் குளிரூட்டும் (வென்டிலேஷன்) வசதி
Facebook Comments Box