ஐஎன்எஸ் நிஸ்தர் மீட்பு கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு!

ஐஎன்எஸ் நிஸ்தர் மீட்பு கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு!

இந்திய கடற்படையின் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஆழ்கடல் மீட்பு கப்பல் “ஐஎன்எஸ் நிஸ்தர்”, விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சிறப்புவிழாவில் நேற்று அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டது. இந்த கப்பல் ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, கடந்த ஜூலை 8-ம் தேதி கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த இணைப்பு விழாவில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத், கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும் நிகழ்வில் உரையாற்றியபோது, இக்கப்பல் ‘தற்சார்பு இந்தியா’ (Atmanirbhar Bharat) திட்டத்திற்கு ஒரு பெரிய முன்னேற்றமாகும் என்றும், உலக தரத்திற்கு இணையான இந்த மீட்பு கப்பல் உருவாக்கம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது என்றும் பாராட்டினர்.

10,000 டன் எடை, 118 மீட்டர் நீளம் கொண்ட நிஸ்தர், நவீனமான தொழில்நுட்ப வசதிகளை கொண்டதாகும். இதில் நிறுவப்பட்டுள்ள உயர் திறன் கொண்ட உபகரணங்கள் மூலமாக, கடற்படை வீரர்கள் 300 மீட்டர் ஆழம் வரை நீந்திச் சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். மேலும், இதில் பொருத்தப்பட்டுள்ள ஆர்ஒவி (Remotely Operated Vehicle) நீர்மூழ்கி உபகரணங்கள் மூலம் 1,000 மீட்டர் ஆழத்திலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள இயலும்.

இது, இந்திய கடற்படையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள டீஎஸ்ஆர்வி (DSRV) ஆழ்கடல் மீட்பு நீர்மூழ்கிக்கு தாய்க்கப்பலாக (Mother Ship) செயல்படவுள்ளது. மேலும், நிஸ்தர் கப்பலில் உள்ள உபகரணங்களில் 75% உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளில் வெறும் சிலர் மட்டுமே இத்தகைய ஆழ்கடல் மீட்பு கப்பல்களை கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்தியா தனது பாதுகாப்புத்துறையில் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

Facebook Comments Box