60 வயதுக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் ரூ.8,000 நிதியுதவி – மத்திய அரசு அறிவிப்பு

60 வயதுக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் ரூ.8,000 நிதியுதவி – மத்திய அரசு அறிவிப்பு

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் மக்களவையில் எழுத்து வடிவில் அளித்த பதிலின் அடிப்படையில், 60 வயதைக் கடந்த மற்றும் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்குள் வருமானம் கொண்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,000 நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த உதவித் தொகை தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இதில் நெசவாளர் மற்றும் கைத்தறித் தொழிலாளர்களின் நலன்களை உயர்த்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஜவுளித் துறை சார்ந்த கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ, இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் படிக்கும் நெசவாளர்களின் இரண்டு குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இயற்கையான காரணங்கள் அல்லது விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர ஊனம் அல்லது பகுதி ஊனத்திற்கு சமூகப் பாதுகாப்பு வழங்கும் வகையில், பிரதமர் ஜீவன் ஜோதி பீமா மற்றும் பிரதமர் சுரக்‌ஷா பீமா திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மூன்றாண்டு காலத்தில் பருத்தி நூல், துணி, ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பருத்தி சார்ந்த பொருட்கள் மட்டும் 35,642 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக புலனாய்வு மற்றும் புள்ளியியல் துறை தரவுகளை மேற்கோளாகக் கொண்டு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments Box