இந்தியா – இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பயனா? தீமையா? – தொழில் வட்டாரக் கருத்துகள்

இந்தியா – இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பயனா? தீமையா? – தொழில் வட்டாரக் கருத்துகள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஆவலுடன் எதிர்நோக்கப்பட்ட வரிச்சலுகையில்லா (தடையற்ற) வர்த்தக ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, தொழில் துறையைச் சேர்ந்த முக்கிய அமைப்புகள் தங்களது பார்வைகளை வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு சூரிய மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம். ராஜா கூறும்போது,

“இந்த ஒப்பந்தம் தமிழகத்திற்கு பெரும் நன்மையைக் கொண்டு வரும். குறிப்பாக, ஜவுளி, தொழில்நுட்ப ஜவுளி, கடல் உணவு, காலணிகள், நகைகள் போன்ற துறைகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இது ஊக்கமளிக்கும்.

மேலும், இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கார்கள் மற்றும் பிற வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை, தமிழகத்தில் (கோவை உள்ளிட்ட பகுதிகளில்) இயங்கும் தொழிற்சாலைகள் வழங்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, 2030-ஆம் ஆண்டுக்குள் 120 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதி இலக்கு இந்தியாவுக்கு உருவாகும். இதனை சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில், தமிழக அரசு தொழில் துறைக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்,” எனக் கூறினார்.

இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் ரகுநாதன் கூறியதாவது:

“இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாக போற்றப்பட்டாலும், ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தில் சமநிலையற்ற அம்சங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன.

தற்போது இந்தியா இங்கிலாந்துடன் வர்த்தக மேல்நிலை (Trade Surplus) கொண்டுள்ள நிலையிலும், இங்கிலாந்து நிறுவனங்களுக்கு அதிக அளவிலான வரிச்சலுகைகள் வழங்கப்படுவது, இந்தியாவின் எம்எஸ்எம்இ துறைக்கு போட்டி சுமையை ஏற்படுத்தும்.

மின்சார வாகனங்கள் மீது சுங்கக் கட்டணத் தளர்வுகள் வழங்கப்பட்டிருப்பதால், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதேபோல, மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் இந்திய நிறுவனங்கள் சந்தையில் பங்கிழக்கும் அபாயமும் உள்ளது.

நூல், காலணி, கடல் உணவுப் பொருட்கள் மீது வழங்கப்படும் சலுகைகள், அந்தத் துறைகளுக்குத் தேவையான அளவில் போதுமானதாக இல்லை.

ஆகையால், ஒப்பந்தத்தின் விளைவுகளைத் துறை ரீதியாக கண்காணிக்க தனி ஆய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும். எம்எஸ்எம்இ நிறுவனங்களை பாதுகாக்கத் தேவையான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தையின் வடிவமைப்பை மறுசீரமைத்து, உள்ளூர் வேலைவாய்ப்பும் மதிப்பூட்டலும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அரசு ஒப்பந்தங்களில் உள்ளூர் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

மொத்தத்தில், இந்த ஒப்பந்தம் மிகுந்த ஜாக்கிரதையுடன் அணுகப்பட வேண்டியது. கொண்டாடத்தக்கது அல்ல. இந்தியா தனது வர்த்தக நோக்கங்களை மறுபரிசீலித்து, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் மறுசீரமைப்பு செய்யவேண்டும்,” என்றார்.

‘ஓஸ்மா’ தலைவர் அருள்மொழி கூறியதாவது:

“வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் இந்திய ஜவுளித் துறைக்கு முக்கிய ஏற்றுமதி வாய்ப்பை உருவாக்கும். குறிப்பாக ‘ஓஇ’ மில் நூல்களில் இருந்து தயாரிக்கப்படும் ஜவுளிப் பொருட்கள் — காடா துணிகள், கரூர் ஜவுளி வகைகள், திருப்பூர் பின்னாடை துணிகள் போன்றவை — இங்கிலாந்தில் அதிக தேவை காணக்கூடியவை.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஜவுளித் துறைக்கு புதிய வளர்ச்சி பாதையை அமைக்க முடியும். இதற்காக மத்திய அரசிற்கு நன்றியுரைக்கிறோம்,” எனத் தெரிவித்தார்.

Facebook Comments Box