இந்தியாவின் நேரடி வரி வசூலில் 4-வது முக்கிய பங்களிப்பாளராக தமிழகம்: வருமான வரி தலைமை ஆணையர் பெருமை

இந்தியாவின் நேரடி வரி வசூலில் 4-வது முக்கிய பங்களிப்பாளராக தமிழகம்: வருமான வரி தலைமை ஆணையர் பெருமை

நாட்டின் நேரடி வரி வருவாயில் தமிழகம் 4-வது பெரிய பங்குதாரராக இருந்து வருவதாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் பிரீத்தி கர்க் பெருமிதத்துடன் கூறினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை சார்பில், 166-வது வருமான வரி தின விழா நேற்று சென்னை டிடிகே சாலையிலுள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இவ்விழாவில் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைத் தலைவர் சவுமியா சுவாமிநாதன் தலைமை ஏற்று, 2024-25 நிதியாண்டில் சிறந்த செயல்பாடுகளை மேற்கொண்ட வருமான வரி அதிகாரிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் முதன்மை தலைமை ஆணையர் பிரீத்தி கர்க் முன்னிலை வகித்தார்.

பின்னர் பேசுகையில் அவர், “வருமான வரித்துறை மிகுந்த வெளிப்படைத்தன்மையுடனும், மக்கள் எளிதில் வரி செலுத்தும் சூழல் உருவாகும் வகையிலும் செயல்படுகிறது. நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதாவும் இந்நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வரி வருவாய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் நேரடி வரியும், ஜிஎஸ்டியும் பெரிதும் பங்களிக்கின்றன. உலகின் சில நாடுகளில் வரி வருவாய் ஜிடிபியின் 30% ஆகும். இந்தியாவில் இப்போது இது 11–12% மட்டுமே. இன்னும் மேம்பட நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,” என்றார்.

மேலும் அவர், “2024-25 நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த வருமானம் ரூ.65 லட்சம் கோடியாக கணிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.43 லட்சம் கோடி வரி மூலம் கிடைத்துள்ளது; அதில் ரூ.25 லட்சம் கோடி நேரடி வரி மூலம் வந்துள்ளதாக கணிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மத்திய அரசின் மொத்த வருவாயில் 39% நேரடி வரி மூலமாக வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலம் தொடர்ந்து சிறப்பான வசூலை மேற்கொண்டு, நாட்டின் நேரடி வரி வருவாயில் நான்காவது இடத்தில் திகழ்கிறது. இந்த நிதியாண்டில் இம்மண்டலத்துக்கான வசூல் இலக்கு ரூ.1.29 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4% அதிகமாகும்,” என்று கூறினார்.

இந்த விழாவில், வருமான வரி அதிகாரிகள் சுதாகர் ராவ், எஸ். பத்மஜா, புலனாய்வு பிரிவு பொது இயக்குநர் பிரதாப் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box