தூத்துக்குடி மின்சார கார் ஆலையை ஜூலை 31ஆம் தேதி திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்: முதலாவது விற்பனையும் தொடக்கம்
தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார் ஆலையை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூலை 31ஆம் தேதி காணொலி வழியாகத் திறந்து வைத்து, முதலாவது கார் விற்பனையை தொடங்கி வைக்க உள்ளார்.
வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் எனும் மின்சார கார் தயாரிப்பு நிறுவனம், ரூ.16,000 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார கார்களை தயாரிக்கும் வகையில் இந்த ஆலைக்கான ஒப்பந்தத்தை தமிழக அரசுடன் மேற்கொண்டது. இதற்காக, தூத்துக்குடி அருகே சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு கடந்த பிப்ரவரி 25, 2024 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நட்டிருந்தார்.
முதல் கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கர் பரப்பளவில் இரண்டு பணிமனைகள், இரண்டு வேர் அவுட் குடோன்கள், கார்கள் சோதனை செய்யும் மையம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டத்தில், வியட்நாமிலுள்ள ஆலையிலிருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, தூத்துக்குடியில் ஒருங்கிணைத்து கார்கள் தயாரிக்கப்படுகிறது.
முதல் கட்டத்தின்போது ஆண்டுக்கு 50,000 யூனிட்கள் அளவில் வி.எப் 6 மற்றும் வி.எப் 7 வகை மின்சார கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த உற்பத்திப் பணிகள் முழுமையடைந்துள்ளதால், ஜூலை 31ஆம் தேதி காலை 8 மணிக்கு இந்த ஆலை திறப்புவிழா நடைபெறும் என வின்ஃபாஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலமாகக் கலந்து கொண்டு, தொழிற்சாலையைத் திறந்து வைத்து, முதல் காரின் விற்பனையைத் தொடங்க உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தற்போது உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், நேரில் வரமுடியாமல் காணொலி வாயிலாகவே நிகழ்வில் பங்கேற்பார் என மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த முதற்கட்ட உற்பத்தியில் உருவாக்கப்படும் வி.எப் 6, வி.எப் 7 வகை மின்சார கார்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படவுள்ளன. இதற்காக, நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் விற்பனை மற்றும் பராமரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், விற்பனைக்கான முன்பதிவு கடந்த மாதம் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, அனைத்து உதிரி பாகங்களும் தூத்துக்குடி தொழிற்சாலையிலேயே தயாரிக்கப்பட்டு, முழுமையாக மின்சார கார்கள் இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.