முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை: இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.2,973 கோடியாக அதிகரிப்பு
இந்தியன் வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை, சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள வங்கியின் தலைமையகத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வங்கியின் மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பினோத் குமார் கூறியதாவது:
2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 23.69% வளர்ச்சி பெற்று, ரூ.2,973 கோடியாக உயர்ந்துள்ளது. 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த லாபம் ரூ.2,403 கோடியாக இருந்தது.
செயல்பாட்டு லாபம் கடந்த ஆண்டு ரூ.4,502 கோடியில் இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.4,770 கோடியாக உயர்ந்து, 5.97% வளர்ச்சி பெற்றுள்ளது.
நிகர வட்டி வருவாய் ரூ.6,359 கோடியாக பதிவாகி, 2.93% வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சொத்துகளின் மீதான லாபம் 1.34% ஆகவும், பங்குகளின் மீதான லாபம் 20.26% ஆகவும் உயர்ந்துள்ளது.
கடன்களால் உருவான வருவாய் 8.58% என்றும், முதலீடுகளால் உருவான வருவாய் 6.96% என்றும் இருந்தது.
மொத்த கடன்கள் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது, 11.50% வளர்ச்சி பெற்று ரூ.6.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளன. சில்லறை, விவசாயம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட துறைகளுக்கான கடன்கள் 15.93% வளர்ச்சி பெற்று ரூ.3.63 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளன.
மொத்த வைப்புத்தொகை ரூ.7.44 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 9.26% வளர்ச்சி அடைந்துள்ளது.
மொத்த வாராக்கடன்கள் கடந்த ஆண்டின் 3.77% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 3.01% ஆக குறைந்துள்ளன. அதேபோல், நிகர வாராக்கடன்கள் கடந்த ஆண்டின் 0.39% இருந்த நிலையில், இவ்வாண்டு 0.18% ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குறைந்தபட்ச இருப்புத் தொகை தொடர்பான மாற்றங்கள்:
இந்த ஆண்டில் தமிழகத்தில் 10 புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், சென்னை அடையாறில் மூத்த குடிமக்களுக்காக ஓர் சிறப்பு கிளை தொடங்கப்பட்டுள்ளது. வங்கியின் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதி தளர்த்தப்பட்டுள்ளது. அதாவது, குறைந்த இருப்பு காரணமாக விதிக்கப்படும் அபராதம் நீக்கப்பட்டுள்ளது.
மேலும், பார்வைத் திறனற்ற வாடிக்கையாளர்களுக்காக ப்ரெய்லி ATM கார்டும், குரல் வழிகாட்டி செயல்பாட்டுடன் கூடிய சிறப்பு செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் வங்கியின் செயல் இயக்குநர்கள் அசுதோஷ் சவுத்ரி மற்றும் பிரஜேஷ் குமார் சிங் உடனிருந்தனர்.