2025-26 நிதியாண்டின் தொடக்க காலாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு ரூ.305 கோடி நிகர இலாபம்

2025-26 நிதியாண்டின் தொடக்க காலாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு ரூ.305 கோடி நிகர இலாபம்

2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.305 கோடி நிகர இலாபத்தை ஈட்டியுள்ளது.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் அண்மையில் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் 2025-26 நிதியாண்டின் முதலாவது காலாண்டுக்கான நிதி அறிக்கைகள் இறுதி செய்யப்படின.

வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சலீ எஸ். நாயர் இதனைக் வெளியிட்டார். அதனடிப்படையில், வங்கியின் மொத்த வணிகம் 9.86 சதவீதம் உயர்ந்து ரூ.98,923 கோடியாக உள்ளது. வைப்புத்தொகை ரூ.53,803 கோடியை அடைந்துள்ளது. கடனளிப்பு தொகை 10.44 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.45,120 கோடியாக உயர்ந்துள்ளது.

வங்கியின் நிகர சொத்து மதிப்பு ரூ.9,328 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.8,244 கோடியாக இருந்தது. தற்போதைய காலாண்டில் வங்கி சம்பாதித்த நிகர இலாபம் ரூ.305 கோடியாகும். முந்தைய ஆண்டின் அதே காலப்பகுதியில் இது ரூ.287 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருமானம் ரூ.567 கோடியிலிருந்து ரூ.580 கோடியாக உயர்ந்துள்ளது.

மொத்த வாராக் கடன் விகிதம் 1.44% இல் இருந்து 1.22% ஆகவும், நிகர வாராக் கடன் விகிதம் 0.65% இலிருந்து 0.33% ஆகவும் குறைந்துள்ளது. வங்கியின் பங்குகளின் புத்தக மதிப்பு ரூ.520.63 இருந்த நிலையில், தற்போது ரூ.589.09 ஆக அதிகரித்துள்ளது.

சில்லறை, விவசாயம் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனின் மொத்தம் ரூ.37,614 கோடியிலிருந்து ரூ.42,100 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த காலாண்டில் 7 புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மனிதவள செயல்பாடுகளைத் தவிர்த்து, வங்கியில் செலவுகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைக்கப்பட்ட விற்பனை மேலாண்மை முறைமை (integrated vendor management system) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வங்கியை முழுமையாக டிஜிட்டல் மற்றும் செயல்முறை சார்ந்த அமைப்பாக மாற்றும் நோக்கில் வணிக செயல்முறை மேலாண்மையும் (business process management) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box