ஜவுளித் துறையை சலுகைகளால் ஈர்க்கும் ஒடிசா – தமிழகம் எதை செய்ய வேண்டும்?
ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ள சிறப்புச் சலுகைகளால் பல ஜவுளி நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் செய்து வருகின்றன. இதன் விளைவாக, எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் குறைவாக இருக்க வாய்ப்பு இருப்பதாக மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் தெரிவித்துள்ளார்.
இதைப் பற்றி ‘இந்த தமிழ் திசை’ நாளிதழுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் கூறியதாவது:
“தற்போதைய கணிப்புகளின்படி, 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 9.69 சதவீதமாக உள்ளது. ஒருவருக்கு ஆண்டிற்கு சராசரி வருமானம் ரூ.1,96,309 என இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தேசிய அளவிலான சராசரியான வருமானம் (ரூ.1,14,710) விட உயர்வாக உள்ளது. ஆண்டுக்கு 9.7% வளர்ச்சி விகிதம் நிலைத்திருந்தால், 2032-33ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்.
தொழில்துறைக்குத் தேவையான சாலைகள், துறைமுகங்கள், கட்டிட வசதிகள் என உள்கட்டமைப்புகளில் தமிழக அரசு பெரிதும் முதலீடு செய்துள்ளது. தொழில் முனைவோர்களுக்கு சாதகமான மாநிலமாக தமிழ்நாடு அமைந்துள்ள நிலையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
தற்போது தொழிலாளர்களில் 50%க்கும் மேற்பட்டோர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தமிழகத்தில் தொழில் பயிற்சி பெற்றுப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்களது சொந்த மாநிலங்களில் தொழிலை மேம்படுத்தும் நோக்கில் அரசுகள் பல்வேறு ஊக்கத்தொகைகளை வழங்கி வருகின்றன. இதனால், அவர்கள் சொந்த இடங்களில் தொழில் தொடங்க முனைந்தால், தமிழகத்துக்கு தேவையான தொழிலாளர்கள் கிடைக்காத நிலை உருவாகும்.
தமிழ்நாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் போட்டியிடும் பிற மாநிலங்களைப் போல் தொழில் வளர்ச்சிக்கான கொள்கைகளை அமைக்கவில்லை. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்ந்துவருவதால், தொழில்துறை போட்டியிலிருந்து விலகிய நிலை ஏற்பட்டுள்ளது. தொழில்துறையினரின் தேவைகளை பூர்த்தி செய்ய நிதி ஒதுக்க முனைப்புடன் செயல்பட்டால் வருவாயும் அதிகரிக்கும்; இதன் மூலம் அரசின் நிதிச்சுமையையும் சமாளிக்க முடியும்.
மாறாக, இலவச சலுகைகள், மானியங்களைச் சுமந்து, இடையறாது வரிவிதிப்பையும் மின் கட்டண உயர்வையும் மேற்கொண்டு, ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு கடன் பெற்று அரசு செலவுகளைச் சமாளிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது தமிழகத்தின் மொத்த கடன் சுமை ரூ.9 லட்சம் கோடியை கடந்துள்ளது. நாடு முழுவதும் அதிகக் கடன் கொண்ட மாநிலமாக தமிழகமே இருக்கிறது.
புதிய தொழில்துறையில் நுழைவதைவிட சேவைத் துறையில் செல்லும்வர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய அரசு பல்வேறு நாடுகளுடன் வரி விலக்கு வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்தாலும், ஏற்கனவே வளர்ச்சியடைந்த தமிழகத்தின் தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யாத நிலை உள்ளது. இதனால் புதிய வளர்ச்சி வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. எனவே, தொழிலாளர்களும் முதலீட்டாளர்களும் விரும்பும் சூழல் தமிழகத்தில் உருவாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
ரூ.7,808 கோடி முதலீடு:
ஜூலை 25ஆம் தேதி ஒடிசா அரசு, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறைகளில் உள்ள 33 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது. இதன் மூலம் ரூ.7,808 கோடி முதலீடு அம்மாநிலத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் 53,300 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஒட்டி ஒடிசா மாநில அரசு நடத்திய ‘ஒடிசா டெக்ஸ் 25’ கண்காட்சியில், கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 160 தமிழ்நாடு ஜவுளி நிறுவனங்கள் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.