அமெரிக்காவின் 25% வரி விதிப்பு இந்திய ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும்? – தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) விளக்கம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள 25 சதவீத வரியும் அதனுடன் சேர்க்கப்பட்ட அபராத கட்டண விதிப்பும், இந்திய ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பெரும் அதிர்வினை ஏற்படுத்தியுள்ளதென தென்னிந்திய மில்கள் சங்கமான சைமா தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கத் தலைவர் டாக்டர் சுந்தரராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“இந்திய அரசு, தற்போது ஆண்டுக்கு 37 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் ஜவுளி ஏற்றுமதியை 2030க்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்துவதே தன்னுடைய முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது. இந்த குறிக்கோளை அடைய, உலக சந்தையில் இந்திய ஜவுளித் துறையின் போட்டியுத்திறனை பெருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காக, இங்கிலாந்து நாட்டுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீஷியஸ் போன்ற நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலமாக ஜவுளித் துறைக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) தொடர்பான பேச்சுவார்த்தைகள் சிறப்பான முன்னேற்றத்தில் உள்ளன. இது அமெரிக்க சந்தையில் இந்திய ஜவுளி மற்றும் ஆடைகளின் போட்டித்திறனை பெருக்கும் என நாங்கள் நம்புகிறோம். ஆனால் தற்போது அமெரிக்கா அறிவித்துள்ள 25% வரி மற்றும் அபராத கட்டண விதி, எதிர்பாராத முறையில் வந்துள்ள அதிர்ச்சி நடவடிக்கையாக உள்ளது. இது சற்று நேரத்தில் இந்திய ஜவுளி ஏற்றுமதியின் வளர்ச்சியைப் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.
மேலும், பண்டிகை சீசன் நெருங்கி வருவதால், இந்தியா ஏற்கனவே மேற்கொண்டுள்ள கோடை கால ஏற்றுமதி ஏற்பாடுகள் இந்த திடீர் வரி அறிவிப்பால் பெரிதும் தாமதமாகலாம் அல்லது பாதிக்கப்படலாம். இந்தியா தற்போது அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு சுமார் 11 பில்லியன் அமெரிக்க டாலருக்குமான ஜவுளி மற்றும் ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது. இது இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில் சுமார் 30 சதவீதத்தை உருவாக்குகிறது.
2020ஆம் ஆண்டில் அமெரிக்க ஆடை இறக்குமதி சந்தையில் இந்தியாவின் பங்கு 4.5% இருந்தது. அது 2024ஆம் ஆண்டில் 5.8% ஆக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் நிலையான வளர்ச்சிப் பாதையை பிரதிபலிக்கிறது. ஆனால் தற்போது அமெரிக்கா இந்திய வீட்டு உபயோக பொருட்களுக்கு 9.6% வரியும், தயாரித்த ஆடைகளுக்கு 16% வரை வரியும் விதித்து வருகிறது. இவை இந்திய பொருட்களின் போட்டியுத்திறனைத் தவிர்க்க முடியாத வகையில் பாதிக்கின்றன.
மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால், இந்த 25% வரி சுமாரானதாக தோன்றலாம். ஆனால் இதில் உள்ள மிக பெரிய சிக்கல் – அபராத கட்டணம் தொடர்பானது தான். இது உண்மையில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நேரில் அனுபவித்த பிறகே முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.
எனவே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அமெரிக்க அதிபரிடம் நேரடியாக இந்த அபராதக் கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்த வேண்டும். மேலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள இருதரப்பு பேச்சுவார்த்தைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்” என சைமா தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.