‘நீலி’: வரலாற்றின் பின்னணியில் உருவாகும் ஒரு அமானுஷ்ய படம்!
2400 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய படத்திற்கு ‘நீலி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் நடிக்கிறார்.
இந்தப் படத்தை ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய எம்எஸ்எஸ் இயக்குகிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“அமானுஷ்யத் திரைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். இப்போது வரலாற்று பின்னணியுடன் இந்தத் தோற்றம் இணைவது, இன்னும் கூடுதல் தனிச்சிறப்பை தருகிறது. ‘நீலி’ பற்றிய பல வரலாற்றுச் செய்திகளை ஆய்வு செய்து, அதில் சிறிது கற்பனையையும் சேர்த்து கதையை வடிவமைத்துள்ளோம்.
கதையை கேட்டவுடனே நட்டி அவர்களுக்கு மிகவும் பிடித்து உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். இதில் இரு முக்கிய நாயகிகள் நடித்துள்ளனர். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்களை விரைவில் அறிவிக்கவிருக்கிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.