அறிமுக ஹீரோ அஹான் பாண்டே நடிப்பில் உருவான ‘சையாரா’ திரைப்படம் ரூ.400 கோடி வசூலைத் தாண்டியது!
பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநர் மோஹித் சூரி இயக்கத்தில் உருவான காதல் திரைப்படம் ‘சையாரா‘ தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனம் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தான் தயாரித்துள்ளது. இதில் ஹீரோவாக அஹான் பாண்டே அறிமுகமாகிறார். இவர் பிரபல நடிகர் சங்கி பாண்டேவின் சகோதரர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அஹானுக்கு ஜோடியாக அனீத் பட்டா கதாநாயகியாக நடித்திருக்கிறார். காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ஜூலை 18-ம் தேதி வெளியானதும் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் வார முடிவில் இந்தியாவில் மட்டும் ரூ.177 கோடி வசூலித்துள்ள இப்படம், 12 நாட்களுக்குள் அதன் வருமானத்தை ரூ.266 கோடி வரை உயர்த்தியுள்ளது.
திரையரங்குகளில் படம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதால், தற்போதைய வார இறுதிக்குள் படம் ரூ.300 கோடி இந்திய வசூலைத் தாண்டும் என சினிமா வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. உலகளாவிய அளவில், ‘சையாரா’ இதுவரை ரூ.404 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025-ம் ஆண்டில் வெளியாகிய பாலிவுட் படங்களில், நடிகர் விக்கி கவுஷல் நடித்த ‘ஜாவா‘ திரைப்படம் தான் இந்தியாவில் அதிகம் வசூலித்தது – ரூ.601 கோடி. அதற்குப் பிறகு அதிக வசூல் ஈட்டிய படம் ‘சையாரா’வாகும்.
ஒரு அறிமுக ஹீரோ நடித்த திரைப்படம் இவ்வளவு பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று, வசூலில் மாபெரும் சாதனை படைத்திருப்பது, பாலிவுட் தயாரிப்பாளர்களிடையே பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.