தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு!
இன்றைய தினத்தில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,120 அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.74,320 ஆகவும் உள்ளது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.73,200 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணிகள் தங்கத்தின் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் ரூ.58,000 ஆக இருந்தது. அதன்பிறகு தங்கத்தின் விலை படிப்படியாக உயர்வடைந்தது.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததன் பின் தங்க விலை அதிகரித்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. தற்போது ஆடி மாதம் என்பதால் தமிழகத்தில் திருமணங்கள் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறுவதில்லை. இந்த சூழ்நிலையிலும் தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். வரவிருக்கும் ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகம் இருப்பதால் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
சென்னையில் இன்றைய (சனிக்கிழமை) நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.140 உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிராம் ரூ.9,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்துள்ளதால், ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனை ஆகிறது. நேற்று பவுன் ஒன்றுக்கு ரூ.73,200 ஆக விற்பனை செய்யப்பட்டிருந்தது.
24 காரட் தங்கத்தின் விலையும் இன்று ஒரு கிராமுக்கு ரூ.153 உயர்வடைந்து, ஒரு கிராம் ரூ.10,135 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.125 உயர்வடைந்து, தற்போது ஒரு கிராம் ரூ.7,680-க்கு விற்பனை ஆகிறது.