புதிய மியூச்சுவல் பண்ட் திட்டம்: கோடக் மஹிந்திராவினால் அறிமுகம்
கோடக் மஹிந்திரா ஆசெஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனம், ஓப்பன் எண்டட் மியூச்சுவல் பண்ட் திட்டமான ‘கோடக் ஆக்டிவ் மொமென்டம் பண்ட்’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம், நிறுவனம் உருவாக்கிய தன்னிச்சையான மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, வருவாய் வளர்ச்சி காண்பிக்கும் பங்குகளை அடையாளம் காண்பதன் மூலம் முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்த முனைகிறது.
இந்த புதிய பாண்டிற்கான ஆரம்ப நிதி வழங்கல் (NFO) இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. இந்தக் காலப்பகுதியில் குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000 ஆகும். அதன் பின்னர் சந்தை மூலமாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். SIP முறையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்ய வேண்டும்.
விலை உயர்ச்சியைக் குறிவைக்கும் பங்குகள்:
பொதுவாக மொமென்டம் பங்குகளில் முதலீடு செய்வது என்றால், எதிர்காலத்தில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ள பங்குகளை தேர்ந்தெடுப்பதாகும். இருப்பினும், மொமென்டம் என்பது வெறும் விலை சார்ந்ததல்ல. வருவாய் மொமென்டம் எனப்படுவது, வலுவான அடிப்படை காரணிகளை சார்ந்தது. இதற்குள், வருவாயில் மேலோங்கும் திருத்தங்கள் மற்றும் நன்கு மதிப்பீடு செய்யப்பட்ட ஆய்வாளர் கணிப்புகளை கொண்ட பங்குகள் அடங்கும்.
இந்த திட்டம், நிலைத்த வளர்ச்சியுடனும், தரமான அடிப்படைச் சூழ்நிலைகளுடனும் கூடிய பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவோருக்கான நல்ல வாய்ப்பாக இருக்கலாம்.