பிரபல டிசிஎஸ் நிறுவனம் 2% ஊழியர்களை குறைக்க முடிவு: 12,000 பேரின் வேலை நிழலில்!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), 2026 நிதியாண்டில் 2 சதவீத ஊழியர்களை குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் சுமார் 12,200 பேர் வேலை இழக்கக்கூடும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊழியர்கள் மீள்பயிற்சி – மறுபணியமர்த்தல் திட்டம்:

நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய சந்தைகளில் பாதிப்பில்லாமல் நுழைவதற்கும், ஏஐ மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தற்போது உள்ள ஊழியர்களுக்கே மீள்பயிற்சி அளித்து, மறுபணியமர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், இந்த மாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, 12,000-க்கும் அதிகமான பணியிடங்கள் குறைக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் சேவைக்கு பாதிப்பு இல்லை என உறுதி:

“வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, இந்த மாற்றங்களை முயற்சி மற்றும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என டிசிஎஸ் நிறுவனம் விளக்கியுள்ளது.

ஐடி துறையின் புதிய சவால்கள்:

இந்திய தகவல் தொழில்நுட்ப துறையே தற்போது தெளிவில்லாத சூழ்நிலையை சந்தித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் புதிய திட்டங்களை தாமதமாக தொடங்குவது, செலவுகளை கட்டுப்படுத்தும் தேவை, தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவை இத்துறையில் பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே. கிருத்திவாசன் தெரிவித்ததாவது:

“வாடிக்கையாளர் முடிவெடுப்பதிலும், திட்டங்களை செயல்படுத்துவதிலும் ஏற்படும் தாமதம், நமக்கு சில கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளது. அதனால், நாங்கள் செலவுகளை மதிப்பீடு செய்து, கட்டுப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த புதிய தீர்மானம், இந்திய ஐடி துறையின் எதிர்காலத்துக்கு சவால் என்று சொல்லலாம்.

Facebook Comments Box