முதல் தடவையாக வேலைக்குச் செல்லும் நபர்களுக்கு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை – மத்திய தொழிலாளர் ஆணையரின் விளக்கம்

முதன்முறையாக வேலைக்கு செல்லும் நபர்களுக்கு ரூ.15,000 வரையிலான ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிரதமரின் வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், மத்திய தொழிலாளர் துணை முதன்மை ஆணையர் ஸ்ரீநுதாரா விளக்கமளித்துள்ளார்.

வேலைவாய்ப்புடன் ஊக்கத்தொகையையும் இணைத்து வழங்கும் வகையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தால் நடத்தப்பட்டது.

இதைப் பற்றிப் பேசும் போது, ஸ்ரீநுதாரா கூறியதாவது:

“உற்பத்தித் துறை உள்ளிட்ட பல துறைகளில் 2027 ஜூலை மாதத்துக்குள் 3.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், ரூ.99,446 கோடி மதிப்பீட்டில் ‘வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு திட்டம்’ கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களும், முதன்முறையாக வேலைக்குச் செல்லும் நபர்களும் ஊக்கத்தொகை பெறுவார்கள்.

இந்தத் திட்டத்தின் முதலாவது கட்டம் 2025 ஏப்ரல் 1 முதல் 2027 ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கும். இதன் கீழ், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து Employees’ Provident Fund (EPF) இல் பதிவு செய்து, முதன்முறையாக வேலைக்கு சேரும் நபர்களுக்கு, ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத் தொகை இரண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது. அதேபோல, நியமன நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மாத ஊதியம் ரூ.10,000 வரை உள்ள ஊழியரை நியமித்தால், நிறுவனத்திற்கு ரூ.1,000; ரூ.20,000 வரை சம்பளம் பெறும் நபர் என்றால் ரூ.2,000; ரூ.20,000க்கும் மேலாக ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறுபவரை நியமித்தால், நிறுவனத்திற்கு ரூ.3,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.**

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழிலாளர் கூடுதல் ஆணையர் லட்சுமிகாந்தன், ஐசிஎஃப் முதன்மை பணியாளர் அதிகாரி ஆர். மோகன்ராஜா, மத்திய தொழிலாளர் அமலாக்க அதிகாரி எம். ரமேஷ், அம்பத்தூர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் மனோஜ் பிரபு, தொழிலாளர் காப்பீட்டு கழகம் (ESI) சார்பில் துணை இயக்குநர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Facebook Comments Box