பாதுகாப்பு துறையின் உற்பத்தி சாதனை – ரூ.1.51 லட்சம் கோடி உயர்வு

2024-25 நிதியாண்டில், பாதுகாப்பு உற்பத்தி இதுவரை எட்டாத உச்சமாக ரூ.1.51 லட்சம் கோடிக்கு உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமைச்சகம் வெளியிட்ட தகவலில், “2024-25 நிதியாண்டில் பாதுகாப்பு உற்பத்தி ரூ.1,50,590 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ரூ.1.27 லட்சம் கோடி உற்பத்தியுடன் ஒப்பிடும் போது 18% வளர்ச்சியை குறிக்கிறது. 2019-20 இல் இந்த மதிப்பு ரூ.79,071 கோடியாக இருந்ததைப் பார்க்கும் போது, 90% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சாதனையை எட்ட, பாதுகாப்பு உற்பத்தித் துறை, பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்கள், பிற அரசுத் துறை உற்பத்தியாளர்கள் மற்றும் தனியார் துறை ஆகியவை இணைந்து பங்காற்றியுள்ளன. இவர்களின் பங்களிப்பை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். இந்திய பாதுகாப்புத் தொழில்துறை வலுவடைவதற்கான தெளிவான சான்றாக இதை அவர் குறிப்பிட்டார்.

மொத்த உற்பத்தியில் பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் பிற அரசுத் துறைகள் 77% பங்களிப்பு செய்துள்ளன. தனியார் துறையின் பங்கு 23% ஆக இருந்தது. இது 2023-24 இல் 21% ஆக இருந்ததை விட உயர்வாகும். இது, நாட்டின் பாதுகாப்புத் துறையில் தனியார் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை காட்டுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கொள்கை சீர்திருத்தங்கள், வணிகச் செயல்முறைகளை எளிமைப்படுத்தல் மற்றும் உள்நாட்டுமயமாக்கல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக, பொதுத்துறையும் தனியார் துறையும் ஆண்டுதோறும் நிலையான வளர்ச்சி கண்டுள்ளன. 2024-25 இல், பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்கள் 16% மற்றும் தனியார் துறை 28% உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளன.

பிரதமர் மோடி தலைமையிலான தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறையில் சுயநிறைவு அடைவதற்கான அரசின் முயற்சியின் விளைவாக இந்த சாதனை உருவாகியுள்ளது. இறக்குமதி சார்பை குறைக்கும் நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுமதி திறனை வலுப்படுத்தும் முயற்சிகள் பலன் தந்துள்ளன.

2024-25 நிதியாண்டில் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2023-24 இல் இருந்த ரூ.21,083 கோடியை விட ரூ.2,539 கோடி அதிகம், அதாவது 12.04% வளர்ச்சி. நிலையான கொள்கை ஆதரவு, தனியார் பங்கேற்பு அதிகரித்தல் மற்றும் விரிவடைந்த ஏற்றுமதி வாய்ப்புகள் காரணமாக, இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி எதிர்காலத்திலும் தொடர்ந்து வளர்ச்சியடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box