ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் 3 ஆண்டுகளில் இந்தியாவுக்கு கிடைத்த லாபம் எவ்வளவு?

2022 மே மாதம் முதல் 2025 மே மாதம் வரை, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதன் மூலம் இந்தியா 17.2 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.1,49,989 கோடி சேமித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து வாங்காமல் இருந்திருந்தால், இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாட்டுக்கு ரூ.15,29,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும். வருடத்திற்கு ரூ.96,923 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது என அனைத்து தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெயபால் கூறியதாவது:

“நாடு சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை 78 ஆண்டுகளாக ரஷ்யா நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக இருந்து வருகிறது. வர்த்தகத்திலும், பாதுகாப்பு துறையிலும் பரஸ்பர உறவு தொடர்ந்து வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

1991 முதல் அமெரிக்காவுடனும் இந்தியா வர்த்தக உறவை பேணி வருகிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 17.90% அமெரிக்கா வாங்குகிறது. ஆனால், அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில் இந்தியாவின் பங்கு வெறும் 2.7% மட்டுமே.

2024–25 நிதியாண்டில், இந்தியா அமெரிக்காவுக்கு ரூ.7.46 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் முக்கியமானவை — வைரம் ரூ.89,000 கோடி, மருத்துவ உபகரணங்கள் ரூ.64,000 கோடி, பெட்ரோலிய பொருட்கள் ரூ.42,000 கோடி, நகைகள் ரூ.32,000 கோடி, அரிசி ரூ.9,000 கோடி, வாகன உதிரிபாகங்கள் ரூ.7,000 கோடி, ஆடைகள் ரூ.6,000 கோடி, ரசாயனங்கள் ரூ.5,000 கோடி, இயந்திரங்கள் ரூ.4,000 கோடி, விவசாய உபகரணங்கள் ரூ.3,000 கோடி.

அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்த முக்கிய பொருட்கள் — விமான உதிரிபாகங்கள் ரூ.74,000 கோடி, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ரூ.49,000 கோடி, ராணுவ உபகரணங்கள் ரூ.38,000 கோடி, பெட்ரோலிய பொருட்கள் ரூ.33,000 கோடி, பொறியியல் சாதனங்கள் ரூ.22,000 கோடி, பிளாஸ்டிக் பொருட்கள் ரூ.18,000 கோடி, வாகன உதிரிபாகங்கள் ரூ.16,000 கோடி, உரங்கள் மற்றும் ரசாயனங்கள் ரூ.12,000 கோடி, சோலார் உபகரணங்கள் ரூ.9,000 கோடி, தோல் பொருட்கள் ரூ.6,000 கோடி.

நமது நாட்டில் வெளிநாட்டு செலாவணியில் அதிகம் செலவாகும் துறை கச்சா எண்ணெய்தான். தினமும் 58 லட்சம் பீப்பாய் தேவையாகிறது. இதில் 88% இறக்குமதி செய்யப்படுகிறது. 2025 ஜூலை மாதத்தில் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த நாடுகளில் ரஷ்யா முதல் இடத்தில் உள்ளது — ரஷ்யா 15,29,000 பீப்பாய்கள், ஈராக் 9,15,000, சவுதி 6,83,000, எமிரேட்ஸ் 4,61,000, அமெரிக்கா 3,72,000 பீப்பாய்கள்.

2025 ஜூன் மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து 21,04,000 பீப்பாய்கள், அமெரிக்காவிடம் இருந்து 3,03,000 பீப்பாய்கள் வாங்கப்பட்டது. ஜூலை மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து 15,29,009 பீப்பாய்கள், அமெரிக்காவிடம் இருந்து 3,72,000 பீப்பாய்கள் வாங்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் ரூ.5,871 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ரஷ்யா அதை இந்தியாவுக்கு ரூ.5,232 க்கு வழங்குகிறது — பீப்பாய் ஒன்றுக்கு ரூ.639 குறைவாக.

இதன் விளைவாக, 2022 மே மாதம் முதல் 2025 மே மாதம் வரை ரூ.1,49,989 கோடி இந்தியா சேமித்துள்ளது. ரஷ்யாவை தவிர்த்து மற்ற நாடுகளில் வாங்கியிருந்தால், தேவை அதிகரிப்பதால் பீப்பாய் ஒன்றுக்கு குறைந்தது ரூ.870 விலை கூடும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் உறுதியான கொள்கைகள் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு செலாவணி இருப்பு உயர்ந்துள்ளது. இது வேளாண் துறையிலும், நாட்டின் 95% தொழில்களையும் நடத்தும் குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோரின் நலனையும் பாதுகாக்கிறது. மேலும், 145 கோடி மக்களின் எரிசக்தி தேவையையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு எடுத்த முடிவுகள் பாராட்டத்தக்கவை.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு 25% வரி உயர்வு இருந்தாலும் போட்டியிடும் திறன் இருந்திருக்கும். ஆனால் 50% வரி உயர்வு பெரிய சவால் என்பதால், ஏற்பட்ட நிதி இழப்பை அரசு தாங்கி, சலுகைகள் வழங்க வேண்டும்,” என அவர் கூறினார்.

Facebook Comments Box