ஒரே நாளில் 70 கோடி பரிவர்த்தனை: புதிய மைல்கல்லை எட்டிய யுபிஐ

இந்தியாவில் யுபிஐ மூலம் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி ஒரே நாளில் 70.7 கோடி பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதனை நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் யுபிஐ பயன்பாடு புதிய மைல்கல் சாதனையை எட்டியுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டோடு ஒப்பிடும் போது, யுபிஐ பரிவர்த்தனைகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. அப்போது தினசரி பரிவர்த்தனை 35 கோடியைத் தொடங்கியிருந்தது. 2024 ஆகஸ்டில் அது 50 கோடியாக உயர்ந்தது. தற்போது அது 70 கோடியாக வளர்ந்துள்ளது. இதை என்பிசிஐ வெளியிட்ட தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

கடந்த ஜூலை மாதம் யுபிஐ-யில் தினசரி பரிவர்த்தனை 65 கோடியாக இருந்தது. ஆகஸ்ட் மாதம் பிறந்ததும் பல்வேறு கட்டணங்கள், வாடகை, ஊதியம் போன்ற பரிவர்த்தனைகள் அதிகரித்ததால், ஆகஸ்ட் 2-ம் தேதி 70 கோடி பரிவர்த்தனை எட்டியது.

இந்தியாவில் யுபிஐ பயன்பாடு

யுபிஐ மூலம் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் பணம் பெறவும் அனுப்பவும் முடிகிறது. இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் வசதியாக உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை யுபிஐ செயல்படுகிறது, இதனால் ரொக்க் பண பயன்பாடு குறைந்துள்ளது.

கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM போன்ற செயலிகளின் மூலம் யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன.

சர்வதேச நிதியம் அறிக்கை

யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை முறையை நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா 2016-ம் ஆண்டு தொடங்கியது. இது ஏராளமான வங்கி கணக்குகளை ஒரு செல்போன் செயலியில் இணைக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் குறைந்த செலவில், உடனடியாக, பாதுகாப்பான முறையில் பண பரிமாற்றம் செய்யலாம்.

யுபிஐ மூலம் ஒவ்வொரு மாதமும் 1,800 கோடி பண பரிமாற்றம் நடைபெறுகிறது. இது ஆண்டுக்கு 32 சதவீதம் அதிகரிக்கிறது. யுபிஐ முறை இந்தியாவை ரொக்க பணம் மற்றும் கார்டு பரிவர்த்தனையிலிருந்து டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாற்றியுள்ளது. தனிநபர்கள் மற்றும் சிறு தொழில்களில் நிதி உள்ளடக்கத்தில் முக்கிய பங்கு யுபிஐக்கு உள்ளது.

இந்தியாவில் நடைபெறும் அனைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் 85 சதவீதம் யுபிஐ கணக்குகள் மூலம் நடைபெறுகின்றன. இதில் 49 கோடியே 10 லட்சம் பயனாளர்கள், 6 கோடியே 50 லட்சம் வணிகர்கள் மற்றும் 675 வங்கிகள் ஒரே தளத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச நிதியம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

Facebook Comments Box