12% வரம்பில் உள்ள பொருட்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைகிறது

12 சதவீத வரம்பில் உள்ள 99% பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறையும் என தெரிகிறது.

டெல்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 79-வது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது ஜிஎஸ்டி கட்டமைப்பில் 5, 12, 18 மற்றும் 28 என 4 வரி அடுக்குகள் உள்ளன. அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது அல்லது குறைந்த வரி விதிக்கப்படுகிறது. அதேநேரம், அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்கள் மிக உயர்ந்த வரி அடுக்கின் கீழ் (28%) வருகின்றன.

ஜிஎஸ்டி விகித முறையை 2 அடுக்குகளாக குறைக்குமாறு அமைச்சர்கள் குழுவுக்கு ஆலோசனை வழங்கி இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது. ஜிஎஸ்டி வரிக் கட்டமைப்பில் ‘ஸ்டாண்டர்டு’ மற்றும் ‘மெரிட்’ என 2 வகைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில நிதியமைச்சர்கள் குழுவுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூலில் 65 சதவீதம் 18% வரி வரம்பின் மூலம் கிடைக்கிறது. ஆடம்பர பொருட்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான 28% வரம்பு 11% பங்கு வகிக்கிறது. 12% வரம்பின் வருவாய் 5 சதவீதம், குறைந்தபட்ச வரி அடுக்கான 5% வரம்பின் வருவாய் 7 சதவீதம் பங்கு வகிக்கின்றன. கார்கள் உள்ளிட்ட ஆடம்பர மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் மீது செஸ் வரி விதிக்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்

  • அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் 5% மற்றும் 18% என 2 அடுக்குகள் மட்டுமே இருக்கும்.
  • 28% வரம்பில் உள்ள 90% பொருட்கள் மற்றும் சேவைகள் 18% வரி வரம்புக்கு மாற்றப்படும்.
  • 18% வரம்பில் உள்ளவற்றில் 99% பொருட்கள் 5% வரி வரம்புக்கு மாற்றப்படும்.
  • புகையிலை உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் சிறப்பு வரியாக 40% வசூலிக்கப்படும்.
  • பொருளாதார நடவடிக்கை மற்றும் நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் வரும் செப்டம்பரில் நடைபெற உள்ளது. இதில் மேற்கண்ட ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box