யுரேனியம் எடுப்பதற்கும், இறக்குமதிக்கும் தனியார் அனுமதி – அரசின் புதிய திட்டம்!
அணுசக்திப் பொருட்களை தவறாக பயன்படுத்தும் அபாயம், கதிர்வீச்சு மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக இதுவரை யுரேனியம் தாதுக்களை வெட்டியெடுத்தல், இறக்குமதி செய்தல், பதப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளில் மத்திய அரசு தனியாருக்கு அனுமதி வழங்கவில்லை.
ஆனால் 2047-ம் ஆண்டுக்குள் நாட்டின் அணுமின் உற்பத்தி திறனை 12 மடங்காக அதிகரிக்க வேண்டும் என்ற இலக்குடன், அரசு தற்போது அணுசக்தி துறையில் தனது ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன்படி, இத்துறையில் தனியாரையும் பங்கேற்க அனுமதிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
இருப்பினும், உலகளாவிய நடைமுறைகளுக்கு ஏற்ப, பயன்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளின் மறுசுழற்சி மற்றும் புளூட்டோனியம் கழிவுகள் நிர்வகித்தல் ஆகியவற்றை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
இந்தியாவில் தற்போது 76,000 டன் யுரேனியம் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இது, அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 10,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய போதுமானதாகும். எனினும் அரசின் பெரும் இலக்கை அடைய, உள்நாட்டு வளங்கள் சுமார் 25% மட்டுமே பூர்த்தி செய்யும். மீதமுள்ள 75% யுரேனியத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். மேலும், நாட்டின் பதப்படுத்துதல் திறனையும் விரைவாக அதிகரிப்பது அவசியமாக உள்ளது.