நெற்பயிரில் மருந்து தெளிப்பதற்கு ‘ட்ரோன்’ பயன்பாட்டைத் தேர்வு செய்யும் தமிழக விவசாயிகள்

காவிரி டெல்டாவில் தற்போது குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறுவை பருவத்தில் 5.66 லட்சம் ஏக்கரில் நெல் நடவு நிறைவடைந்துள்ளது. அதேசமயம், சம்பா பருவத்திற்காக 9.70 லட்சம் ஏக்கரில் நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நெற்பயிரில் உரங்களை இலைவழியாக வழங்கவும், பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கவும் விவசாயிகள் ட்ரோன்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு ரூ.450 கட்டணம் வசூலிக்கும் தனியார் ட்ரோன் சேவை வழங்குநர்கள், 10 ஏக்கருக்கு மேல் உள்ள வயல்களில் நேரடியாக சென்று தெளிப்பு செய்கின்றனர்.

ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கப்படுவதால், இலைவழி ஊட்டச்சத்து சீராக கிடைக்கிறது. இதனால் பயிர் சிறப்பாக வளரும். மேலும், குருத்துப் பூச்சி, கருப்பு வண்டு, ஆணைக்கொம்பன் போன்ற பல்வேறு பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. கை ஸ்பிரேயர் மூலம் தெளித்தால் மருந்து விரயம் அதிகம். ஆனால் ட்ரோன் மூலம் சீராக தெளிக்கப்படுவதால் மருந்துச் செலவு 50% வரை குறைகிறது.

பொதுவாக ஸ்பிரேயர் தொழிலாளி 5 ஏக்கருக்குத் தெளிக்க ஒரு நாள் முழுவதும் எடுத்துக்கொள்வார். ஆனால் ட்ரோன் மூலம் 2 மணிநேரத்தில் அதே பணி முடிந்துவிடுகிறது. இதனால் நேரமும் செலவும் மிச்சமாவதால், விவசாயிகள் இந்த முறைக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

விவசாயிகள் சங்க கருத்து

தமிழக விவசாயிகள் சங்க டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப. ஜெகதீசன் கூறியதாவது:

“விவசாயத்தில் புதிய முறைகள் அடிக்கடி அறிமுகமாகின்றன. மருந்து தெளிப்பதற்கான கூலித் தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, விவசாயிகள் சிரமப்பட்டனர். தற்போது ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் நேரமும் செலவும் மிச்சமாகிறது. யூரியா போன்ற உரங்கள் ‘நானோ யூரியா’ என்ற திரவ வடிவில் கிடைக்கத் தொடங்கியுள்ளதால், ட்ரோன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

இப்போது பெரிய நிலதாரிகள் மட்டுமே பயன்படுத்தும் ட்ரோன்களை, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் அரசு மானிய விலையில் வழங்க வேண்டும். மேலும், டிராக்டர் வாடகை திட்டம் போன்று, ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் திட்டத்தையும் வேளாண்மைத் துறை செயல்படுத்த வேண்டும்” என்றார்.

அதிகாரிகள் கருத்து

வேளாண் அதிகாரிகள் தெரிவித்ததாவது:

“ட்ரோன் மூலம் தெளிப்பதால் பயிருக்கு சீரான சத்துகள் கிடைக்கின்றன. தற்போது பல இளைஞர்கள் ட்ரோன் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பணியாளர்களை நியமித்தால், ட்ரோன் பயன்பாட்டை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த முடியும். இதற்கான இறுதி முடிவை எடுப்பது தமிழக அரசின் பொறுப்பு” என்றனர்.

Facebook Comments Box