ஆண்டுக்கு ரூ.95 கோடி சம்பளம் பெறும் ஹெச்சிஎல் டெக் சிஇஓ
இந்திய ஐடி துறையில் அதிக சம்பளம் பெறும் தலைவர்களின் பட்டியலில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஇஓ சி. விஜயகுமார் முதலிடத்தில் உள்ளார். 2024–25 நிதியாண்டில் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ.94.6 கோடி ஆகும்.
இதில் அடிப்படை சம்பளம் ரூ.15.8 கோடி, செயல்திறன் சார்ந்த போனஸ் ரூ.13.9 கோடி மற்றும் பிற நன்மைகளும் அடக்கம். அவரைத் தொடர்ந்து, இன்ஃபோசிஸ் சிஇஓ சலில் பரேக் சம்பளம் 22% உயர்ந்து ரூ.80.6 கோடி ஆகியுள்ளார். விப்ரோ சிஇஓ நிவாஸ் பலியா ரூ.53.6 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
டிசிஎஸ் சிஇஓ கே. கிருத்திவாசன் கடந்த 2023–24 நிதியாண்டில் ரூ.26.5 கோடி சம்பளம் பெற்றிருந்தார். ஹெச்சிஎல் டெக் ஆண்டறிக்கையில், விஜயகுமாருக்கு வழங்கப்பட்ட சம்பளம் முந்தைய நிதியாண்டை விட 7.9% அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், நிர்வாகத்தை தவிர்ந்த பிற ஊழியர்களுக்கான சராசரி சம்பள உயர்வு 3.1% மட்டுமே இருந்தது. இதன் அடிப்படையில், சிஇஓ விஜயகுமாரின் சம்பளம் ஊழியர்களின் சராசரி ஊதியத்தைவிட 662.5 மடங்கு அதிகமாகும்.
விஜயகுமாரை இந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் 2030 மார்ச் 31 வரை ஹெச்சிஎல் டெக் சிஇஓ மற்றும் எம்டி ஆக மீண்டும் நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.