வரி குறைப்பு: இரண்டு நிலை ஜிஎஸ்டி முறைக்கு அமைச்சர்கள் குழு அனுமதி

மத்திய அரசு முன்மொழிந்துள்ள இரண்டு நிலை ஜிஎஸ்டி வரி முறையை மாநில அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளிக்குள் மக்களுக்கு நற்செய்தியாக ஜிஎஸ்டி வரி கணிசமாக குறைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, குறைந்தது 5% மற்றும் அதிகபட்சம் 18% கொண்ட இரண்டு நிலை வரிமுறை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது ஜிஎஸ்டி வரி 4 நிலைகளில் உள்ளது: 5%, 12%, 18%, 28%. இதில், 12% பிரிவில் உள்ள பொருட்கள் 5% ஆகவும், 28% பிரிவில் உள்ள 90% பொருட்கள் 18% ஆகவும் குறைக்கப்படவுள்ளன. இதன் மூலம், விலைகள் குறைந்து பொதுமக்கள் நிதிசுமையிலிருந்து ஓரளவு விடுபடுவார்கள்.

இந்த மாற்றம் தொடர்பாக மாநில அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி, மத்திய அரசின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், “ஜிஎஸ்டி 12% மற்றும் 28% பிரிவுகளை நீக்கும் முன்மொழிவுக்கு எங்கள் ஆதரவை தெரிவித்துள்ளோம். இதனை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கிறோம். இறுதி முடிவு கவுன்சில்தான் எடுக்கும்” என அவர் கூறினார்.

அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் தொடக்கத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்தால், 2-நிலை ஜிஎஸ்டி முறை நாடு முழுவதும் அமலுக்கு வரும். இதன் மூலம், தீபாவளிக்குள் பல்வேறு பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

Facebook Comments Box