மதுரையில் பஞ்சகவ்ய விநாயகர் சிலைகள் – மகளிர் சுய உதவிக்குழு முயற்சி
வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பஞ்சகவ்ய விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
பொதுவாக விழாவில் மக்கள் களிமண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், தெர்மாகோல் உள்ளிட்ட பொருட்களால் ஆன சிலைகளை வீடுகளிலும் வீதிகளிலும் வைத்து வழிபட்டு, பின்னர் நீர்நிலைகளில் கரைக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் நட்பு களிமண் சிலைகளுக்கே அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், பசுமாட்டின் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து இயற்கைச் சேர்மங்களால் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. இச்சிலைகள் வழிபாட்டிற்குப் பின் நீர்நிலைகளில் கரைந்தாலும் மாசு ஏற்படாது; மாறாக இயற்கை உரமாக மாறுகிறது.
மதுரை ஒத்தக்கடையில் உள்ள மந்தையம்மன் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பூர்ணிமா தேவி கூறுகையில்:
“பஞ்சகவ்யத்தில் விளக்கு, முகப்பூச்சுப் பொடி, விநாயகர் சிலை ஆகியவற்றை செய்து விற்பனை செய்கிறோம். இந்த வருடம் முதல் முறையாக பஞ்சகவ்ய விநாயகர் சிலைகளை சந்தைக்கு கொண்டு வந்துள்ளோம். மகளிர் திட்டக் கண்காட்சிகளிலும், ஆன்லைனிலும் விற்பனை செய்கிறோம். பூஜைக்குத் தேவையான 15 பொருட்களுடன் கூடிய விநாயகர் சதுர்த்தி கிட்டு ரூ.499க்கு வழங்கப்படுகிறது. கூடுதலாக ‘பரிபூர்ணா பெண்கள் உலகம்’ என்ற யூடியூப் சேனல் மூலம் மக்களுடன் தொடர்பில் இருக்கிறேன்” என்றார்.