நாளொன்றுக்கு 2 மில்லியன் பீப்பாய்: ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் உயர்வு!
நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில், ரஷ்யாவில் இருந்து இந்தியா நாளொன்றுக்கு 2 மில்லியன் பீப்பாய் அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. சுத்திகரிப்பு நிறுவனங்கள் பொருளாதார ரீதியான முன்னுரிமையை கருத்தில் கொண்டு கொள்முதல் செய்து வருவதால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் (2025) மாதத்தின் முதல் பாதியில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி நாளொன்றுக்கு சுமார் 5.2 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது. இதில் 38% பங்கு ரஷ்யாவில் இருந்து வந்ததாக, உலகளாவிய தரவு பகுப்பாய்வு நிறுவனம் Kpler தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி 1.6 மில்லியன் பீப்பாய் அளவில் இருந்தது. இதன் விளைவாக ஈராக் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவின் கொள்முதல் முறையே 7.30 லட்சம், 5.26 லட்சம் பீப்பாய்களாக குறைந்தன. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி 2.64 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே இருந்தது. இந்தியாவின் எண்ணெய் கொள்முதலில் அமெரிக்கா 5வது இடத்தில் உள்ளது.
“அமெரிக்கா 50% வரி விதித்த சூழலிலும், ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப் கடந்த ஜூலை இறுதியில், இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்தார். ஆனால் ஆகஸ்ட் மாதத்திற்கான கொள்முதல் முடிவுகள் ஜூன், ஜூலை தொடக்கத்தில் எடுக்கப்பட்டவை. எனவே, புதிய வரி கொள்கையின் தாக்கம் இந்திய இறக்குமதியில் எவ்வாறு வெளிப்படும் என்பது செப்டம்பர் இறுதியிலும் அக்டோபரிலும் தான் தெரியும்” என்று வர்த்தக நிபுணர் சுமித் ரித்தோலியா கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யாவில் இருந்து இறக்குமதியை குறைக்குமாறு மத்திய அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே வர்த்தகம் வழக்கம்போல தொடரும் என வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் டாப் 3 நாடுகளில் இந்தியா ஒன்று. 2022 முதல் உக்ரைன் போர் காரணமாக பல நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகள் விதித்துள்ளன. இந்த சூழலில், ரஷ்யா தள்ளுபடி விலையில் எண்ணெய் வழங்கி வருவதால், இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது.
உக்ரைன் போருக்கு முன்பு ரஷ்யா பங்கு 0.2% மட்டுமே இருந்தது. ஆனால் போருக்குப் பிறகு அது 35–40% ஆக உயர்ந்துள்ளது. தள்ளுபடி பீப்பாய் ஒன்றுக்கு அதிகபட்சம் 40 டாலர் முதல் குறைந்தபட்சம் 1.5 டாலர் வரை உள்ளது. நடப்பு மாதத்தில் பீப்பாய் ஒன்றுக்கு 2 டாலர் தள்ளுபடி விலையில் இந்தியா ரஷ்ய எண்ணெயை கொள்முதல் செய்து வருகிறது.