தினசரி 1 ஜிபி டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்திய ‘ஜியோ’!
முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அதன் தினசரி 1 ஜிபி மொபைல் டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்தியுள்ளது. இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் இப்போது ரூ.299 பிளானின் கீழ் ரீசார்ஜ் செய்ய வேண்டிய சூழலில் உள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும். 2016-ல் பொது பயன்பாட்டுக்கு சேவையை வழங்கத் தொடங்கியது. அடுத்த சில ஆண்டுகளில், நிறுவனம் டெலிகாம் சந்தையில் வேகமாக வளர்ந்தது. ஆரம்ப கால ரீசார்ஜ் திட்டங்களும் இதற்கு காரணமாக இருந்தன.
இந்த சூழலில் ஜியோ, தினசரி 1 ஜிபி மொபைல் டேட்டா வழங்கிய ரூ.209 (22 நாட்கள் வேலிடிட்டி) மற்றும் ரூ.249 (28 நாட்கள் வேலிடிட்டி) திட்டங்களை நிறுத்தியுள்ளது. இந்த திட்டங்களில் அன்லிமிடெட் அழைப்புகள் கிடைத்திருந்தன.
இதனால், ஜியோ வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.299 (28 நாட்கள்) அல்லது ரூ.198 (14 நாட்கள்) திட்டங்களில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த திட்டங்களில் அழைப்புகள் மட்டும் அன்லிமிடெட் ஆகும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா அல்லது அதற்கு மேல் கொண்ட திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அன்லிமிடெட் 5ஜி சேவை கிடைக்கும்.