தவறான விளம்பரம்: விஎல்சிசி நிறுவனத்திற்கு ரூ.3 லட்சம் அபராதம்

உடல் பருமனைக் குறைப்பதற்கான தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக, விஎல்சிசி அழகு நிலைய நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது:

விஎல்சிசி நிறுவனம், உடல் பருமனையும் கொழுப்பையும் குறைக்கும் சிகிச்சை வழங்குவதாக விளம்பரங்களை வெளியிட்டது. மேலும், அமெரிக்க FDA அனுமதி பெற்ற கருவிகளை பயன்படுத்தி உடனடியாக உடலை ஒல்லியாக்கலாம் எனவும் பிரசாரம் செய்தது.

ஆனால், இந்த விஷயம் அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, விசாரணை நடத்தப்பட்டது. அதில், குறித்த கருவிகள் மூலம் உடல் பருமனைக் குறைக்க முடியாது என்றும், விளம்பரங்கள் நுகர்வோருக்கு தவறான தகவல்களை வழங்குகின்றன என்றும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, விஎல்சிசி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box