எம்எஸ்எம்இ தொழில்களில் 25 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் – மேற்கு வங்க முதல்வரின் அழைப்பு காரணமாக தொழில்முனைவோருக்கு அச்சம்

தமிழகத்தில் இயங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் (MSME) தற்போது சுமார் 25 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்த சலுகை திட்டம், மாநில தொழில்துறையினருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அளவில் உற்பத்தி மற்றும் சேவை துறையில் முன்னணியில் இருக்கும் தமிழகத்தில், அடிப்படை வேலைகளுக்கான தொழிலாளர் பற்றாக்குறை நீண்டகால பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் ஒடிசா, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

ஆரம்பத்தில் கட்டுமானம், நெய்தல், மருத்துவமனை, ஓட்டல் போன்ற துறைகளில் மட்டுமே அவர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது விவசாயம், சரக்கு வாகனம் ஓட்டுதல், தூய்மைப் பணி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இவர்களின் பங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில், “பிற மாநிலங்களில் வேலை செய்து வரும் மேற்கு வங்க தொழிலாளர்கள் திரும்பி வந்தால், ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 ஊக்கத்தொகையுடன் வேலை வாய்ப்பு வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, தமிழக தொழில் துறையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் சங்க மாநிலச் செயலாளர் ஜெயபால் கூறியதாவது:

“தமிழகத்தில் தற்போது 50 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு தொழில்பயிற்சி, தங்குமிடம், ஊக்கத்தொகை போன்ற பல சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லாத துறை எதுவுமில்லை என்றே சொல்லலாம்.

ஆனால், மேற்கு வங்க முதல்வரின் அறிவிப்பு, தொழில்முனைவோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் ஒப்பந்ததாரர்களே இங்கே முக்கிய பங்காற்றுகின்றனர். ஒவ்வொரு தொழிலாளரின் ஊதியத்திலிருந்து கமிஷன் வசூலிக்கும் இவர்கள், ஒருவருக்கு மாதம் ரூ.12 லட்சம் வரையிலும் சம்பாதித்து வருகின்றனர்.

இந்த ஒப்பந்ததாரர்கள் வேறு மாநிலத்துக்குச் சென்றுவிட்டால், தமிழக தொழில்கள் பலவும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, புலம்பெயர் தொழிலாளர்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதுவே பிரச்சினைக்கு சரியான தீர்வாகும்” என்றார்.

Facebook Comments Box