கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை உயர்வு: கிலோ ரூ.40; சில்லறை கடைகளில் ரூ.60
கோயம்பேடு சந்தையில் கடந்த மே மாதம் தக்காளி மொத்த விலையில் கிலோ ரூ.15-க்கும் குறைவாக விற்கப்பட்டு வந்தது. ஜூன் மாத பிற்பகுதியில் தக்காளி விலை உயரத் தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 24) கிலோ ரூ.40 வரை விற்கப்பட்டது. திருவல்லிக்கேணி ஜாம் பஜார், சைதாப்பேட்டை காய்கறி சந்தை உள்ளிட்ட சில்லறை கடைகளில் கிலோ ரூ.60 வரை விற்கப்படுகிறது.
அதேபோல், கடந்த மே மாதம் கிலோ ரூ.40 வரை சரிந்த முருங்கைக்காய், நேற்றைய நிலவரப்படி கிலோ ரூ.10க்கு விற்கப்பட்டது. முட்டைகோஸ் விலையும் நேற்று கிலோ ரூ.5 வீழ்ச்சி அடைந்தது.
கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகள் விலை:
- பீன்ஸ்: ரூ.50
- அவரைக்காய்: ரூ.40
- பச்சை மிளகாய்: ரூ.30
- பாகற்காய்: ரூ.25
- கேரட், சாம்பார் வெங்காயம்: ரூ.20
- வெங்காயம்: ரூ.17
- புடலங்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு: ரூ.15
- பீட்ரூட், வெண்டைக்காய், நூக்கல், முள்ளங்கி: ரூ.10
தக்காளி விலை உயர்வு காரணமாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகள் கூறியதாவது:
“தமிழகத்தை ஒட்டிய கர்நாடகா, ஆந்திரா மாநில பகுதிகளில் இருந்து தான் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வருகிறது. அப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக மழை பெய்து வருவதால், தக்காளி உற்பத்தி குறைந்தது. செப்டம்பர் 3-வது வாரத்துக்கு மேல் விலை குறைய வாய்ப்பு உள்ளது.”