இந்திய மின்சார கார்கள் உலகம் முழுவதும் பெருமையுடன் ஓடும் – பிரதமர் நரேந்திர மோடி உறுதி

குஜராத் மாநிலம் ஹன்சல்பூரில் அமைந்துள்ள மாருதி சுசூகி ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் இ-விடாரா மின்சார காரை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து வெளியிட்டார். 640 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலை, இந்தியா-ஜப்பான் நட்புறவின் சின்னமாகக் கருதப்படுகிறது.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவில் தயாரிப்போம், உலகுக்காக தயாரிப்போம் என்ற திட்டத்தில் இன்று மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளோம். ஹன்சல்பூரில் தயாரிக்கப்படும் இ-விடாரா மின்சார கார்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. விரைவில் உலகம் முழுவதும் இந்திய மின்சார கார்கள் சிறப்பாக இயங்கும்” என்று தெரிவித்தார்.

மேலும், மின்சார கார் உற்பத்திக்குத் தேவையான பேட்டரிகள் இப்போது இந்தியாவில் தானே தயாரிக்கப்படுவதாகவும், குறிப்பாக ஹன்சல்பூர் ஆலையில் ஹைபிரிட் பேட்டரிகள் உருவாக்கப்படுவதாகவும் கூறினார். பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை ஹைபிரிட் மின்சார வாகனங்களாக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்குமாறு மாருதி சுசூகி நிறுவனத்திடம் கோரியிருந்ததை, அந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டு 6 மாதங்களில் ஹைபிரிட் மின்சார ஆம்புலன்ஸ் மாதிரியை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நாடு முழுவதும் ஓடும் பழைய வாகனங்களை ஹைபிரிட் மின்சார வாகனங்களாக மாற்றினால் காற்று மாசு கணிசமாக குறையும். இதற்காக ரூ.11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிஎம் இ-டிரைவ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக செமி கண்டக்டர் துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். நாடு முழுவதும் 6 செமி கண்டக்டர் ஆலைகள் தற்போது உருவாகி வருகின்றன. இந்தியா இந்த துறையிலும் உலகளவில் முன்னேறும்” என பிரதமர் வலியுறுத்தினார்.

அத்துடன், “இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களும் 100 சதவீதம் உள்நாட்டுப் பொருட்களே. அவை இந்திய நிலத்தில், இந்தியர்களின் உழைப்பால் உருவாகின்றன. எனவே மக்கள் உள்நாட்டுப் பொருட்களை வாங்குவதில் பெருமை கொள்வது அவசியம்” என்றும் அவர் கூறினார்.

ஜப்பானைச் சேர்ந்த சுசூகி நிறுவனம் இந்தியாவின் சர்வதேச தூதராக செயல்பட்டு வருவதாகவும், விரைவில் ஜப்பானுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

ஹன்சல்பூர் ஆலையில் மாருதி சுசூகி நிறுவனம் ரூ.21,000 கோடி முதலீடு செய்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 7.5 லட்சம் கார்கள் தயாரிக்கப்படும் திறன் உள்ளது. 2026 ஆம் ஆண்டுக்குள் 67,000 இ-விடாரா மின்சார கார்களை உற்பத்தி செய்யும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box