அமெரிக்க வரி தாக்கம்: சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு – இந்திய பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சி

விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்குப் பின் இன்று (ஆகஸ்ட் 28) இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியவுடன், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் திடீர் வீழ்ச்சியைக் கண்டன.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 25% கூடுதல் வரி ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்தது. ஏற்கனவே இருந்த 25% வரியுடன் சேர்ந்து மொத்தம் 50% ஆகும் இந்த வரி, இந்தியாவின் ஏற்றுமதிக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என மதிப்பிடப்படுகிறது. இதனால் தொழிலாளர் சார்ந்த துறைகளில் ஏற்றுமதி சுமார் 70% வரை குறையும் அபாயம் நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் பங்குச் சந்தை கடுமையாக சரிந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2.66 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 1% குறைந்து 80,093.52 புள்ளிகளில் வர்த்தகமாடியது. இதனால் மொத்த சந்தை மூலதனம் ரூ.449 லட்சம் கோடியில் இருந்து ரூ.445 லட்சம் கோடியாக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் இதேபோல் 1% வீழ்ச்சி அடைந்து 24,507.20 புள்ளிகளில் வர்த்தகம் செய்தது. அமெரிக்க வரி விதிப்பு காரணமாக ஏற்பட்ட நெருக்கடியே இந்த சரிவுக்கு முக்கிய காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Facebook Comments Box