ட்ரம்ப் 50% வரி விதித்த ‘உண்மை’ காரணமும், இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கையும் – ரகுராம் ராஜன் விளக்கம்

இந்தியாவை குறிவைத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்துள்ள கூடுதல் வரிகளின் பின்னணியை விரிவாக விளக்கியுள்ளார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்.

ஆகஸ்ட் 27 முதல் அமலாகியுள்ள 25% கூடுதல் வரியால், ஏற்கனவே உள்ள 25% அடிப்படை வரியுடன் சேர்த்து இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதித் துறைகள், குறிப்பாக தொழிலாளர் சார்ந்த பிரிவுகள், கடுமையாக பாதிக்கப்படும் என்று அச்சம் நிலவுகிறது.

இந்த சூழலில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த ரகுராம் ராஜன் கூறியதாவது:

“இந்தியாவுக்கு எதிரான இந்த 50% வரிவிதிப்பின் காரணம் வெறும் வர்த்தகம் மட்டுமல்ல. அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களும் அதனுடன் தொடர்புடையவை. அமெரிக்காவை மற்ற நாடுகள் மலிவான பொருட்களை அனுப்பி தங்களுக்கே அதிக நன்மை பெறும் வகையில் பயன்படுத்திக்கொள்கின்றன என்று ட்ரம்ப் நம்புகிறார். 1980களிலிருந்தே ஜப்பான் குறித்து அவர் இதுபோன்ற விமர்சனங்களை முன்வைத்தார். எனவே, இறக்குமதி வரி அமெரிக்காவுக்கு சமநிலை உண்டாக்கும் என அவர் கருதுகிறார்.

மேலும், இத்தகைய வரிகள் அமெரிக்க நுகர்வோரை பாதிக்காது; இறக்குமதி செய்பவர்களையே பாதிக்கும் என்று ட்ரம்ப் நம்புகிறார். உண்மையில் இது அமெரிக்க வருவாயை கூட்டும் ஒரு தந்திரம் மட்டுமே. அவர் முன்பு அறிவித்த வரிக் குறைப்பால் ஏற்பட்ட வருவாய் இழப்பை இந்த இறக்குமதி வரிகள் சமன்படுத்தும் என கருதுகிறார்.

அத்துடன், அமெரிக்கா நேரடியாக ராணுவ ஆதிக்கம் செலுத்த முடியாத இடங்களில் இந்த வரி மூலம் தனது அதிகாரத்தை காட்ட முயல்கிறார்,” என்றார்.

இந்தியா தனிமைப்படுத்தப்படுகிறதா?

இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25% அடிப்படை வரியே மற்ற ஆசிய நாடுகளை விட அதிகமாக இருப்பது தனிமைப்படுத்துதலின் அறிகுறி என ரகுராம் ராஜன் குறிப்பிட்டார். “ரஷ்யாவுடன் நட்பாக இருக்கும் துருக்கி, சீனாவுக்கு கூட இத்தகைய கடுமையான அடிப்படை வரி விதிக்கப்படவில்லை. ஆனால் இந்தியா மட்டும் அதிக அழுத்தத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியா-அமெரிக்க உறவு சீர்குலைந்ததின் சான்று” என்றார்.

இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், “இது பவர் பிளே தான். ட்ரம்ப், இந்தியா விதிகளை பின்பற்றவில்லை என நம்புகிறார். அதனால் தனிமைப்படுத்தும் நோக்கில் இந்த வரியை விதித்துள்ளார்.

இந்தச் சூழலில், ரஷ்ய எண்ணெயால் கிடைக்கும் லாபத்தை விட அதிக வரி காரணமாக ஏற்படும் நஷ்டத்தையே இந்தியா கவனிக்க வேண்டும். கச்சா எண்ணெய் கொள்முதல் ஒரு சமநிலை உத்தியுடன் நடத்தப்பட வேண்டும். ரஷ்யாவை மட்டும் சார்ந்து கொள்ளாமல் பல நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யும் வாய்ப்பு வைத்திருக்க வேண்டும்.

மேலும், அதிக லாபம் சம்பாதிக்கும் சுத்திகரிப்பு நிறுவனங்களின் கூடுதல் லாபத்தை அரசே பங்கிடச் செய்து, ஏற்றுமதியாளர்கள் அதிக வரி காரணமாக பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும்,” என்றார் ரகுராம் ராஜன்.

Facebook Comments Box