2038-ஆம் ஆண்டில் உலகின் 2-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா: எர்ன்ஸ்ட் & யங் அறிக்கை

2038-ல், அமெரிக்காவை முறியடித்து இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், “இந்தியாவின் வலுவான பொருளாதார அடித்தளம், மக்கள் தொகையில் இளையோர் சதவீதம் அதிகம் இருப்பது, தொடர் தொழில் சீர்திருத்தங்கள், சேமிப்பு மற்றும் முதலீட்டு விகிதம் உயர்ந்து காணப்படுவது ஆகியவை நீண்டகால வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, வாங்கும் சக்தி அடிப்படையில் (PPP) 4.19 டிரில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜிடிபி) இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. விரைவில் அது மூன்றாவது இடத்துக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2030-க்குள் இந்தியாவின் பொருளாதாரம் 20.7 டிரில்லியன் டாலரை எட்டும் என்றும், அந்தக் காலத்தில் இந்தியாவின் சராசரி ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.5% ஆக இருக்கும் எனவும், அதே நேரத்தில் அமெரிக்காவின் வளர்ச்சி விகிதம் 2.1% ஆக மட்டுமே இருக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது.

இந்த வளர்ச்சி போக்கு 2030-க்கு பின் தொடர்ந்தால், 2038-க்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 34.2 டிரில்லியன் டாலருக்கு சென்று அமெரிக்காவைத் தாண்டி உலகின் 2-வது பெரிய பொருளாதாரமாக மாறும்” என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Facebook Comments Box