அமெரிக்க வரியால் ஏற்பட்ட நெருக்கடி: திருப்பூரில் செப்டம்பர் 2-ம் தேதி திமுக கூட்டணியின் ஆர்ப்பாட்டம்

திருப்பூரை தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசை கண்டித்தும், அமெரிக்கா விதித்துள்ள வரிகளிலிருந்து உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் செப்டம்பர் 2-ம் தேதி திருப்பூர் ரயிலடி அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அமெரிக்கா, இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு 50% வரி விதித்துள்ளதால், பின்னலாடைத் தொழிலின் முக்கிய மையமான திருப்பூர் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டதோடு, பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

முன்னதாகவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி சிக்கல்கள், கொரோனா போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்டிருந்த திருப்பூர், தற்போது மீண்டும் முன்னேற்றம் பெற்று ஆண்டுக்கு 45,000 கோடிக்கும் மேற்பட்ட ஏற்றுமதி வர்த்தகத்தை மேற்கொண்டு வந்தது. ஆனால் அதற்கு இடையூறாக அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு ஏற்பட்டுள்ளது. இது, மத்திய பாஜக அரசின் வெளிநாட்டு கொள்கை தோல்வியை வெளிப்படுத்துகிறது.

திருப்பூர் பின்னலாடைத் தொழில் தொடர்பாக ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் கடந்த 16-ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழ்நாட்டின் ஜவுளித் துறை சுமார் 75 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருவதாகவும், அமெரிக்கா விதித்த வரியால் சுமார் 30 இலட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனை முன்னிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எச்சரிக்கைகள் பல முறை விடுக்கப்பட்டும், அமைதியாகவே இருப்பது கவலையளிக்கிறது.

பெரும் முதலாளிகள் போன்றவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் மத்திய பாஜக அரசு, சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் நலனில் அக்கறை காட்டாமல் இருப்பது கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் தொழில் நகரங்களை தொடர்ந்து புறக்கணிப்பது ஏன் எனும் சந்தேகம் எழுகிறது.

அமெரிக்கா ஒருபுறம் அதிக வரி விதித்து நெருக்கடி உண்டாக்கினாலும், மறுபுறம் அதனை சமாளிக்க எந்த சலுகைகளையும் வழங்காத மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் திருப்பூர் தொழிலை மேலும் சிக்கலில் ஆழ்த்துகிறது. எனவே உடனடி நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு வரிச்சலுகை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குரலாக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர்ந்து போராடும் என்றும், திருப்பூரில் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் அதன் ஒரு பகுதியாகும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் துரைமுருகன் (திமுக), கி.வீரமணி (திராவிடர் கழகம்), கு.செல்வபெருந்தகை (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட்), இரா.முத்தரசன் (இ.கம்யூ.), தொல்.திருமாவளவன் (விசிக), கே.எம்.காதர்மொய்தீன் (ஐ.யூ.எம்.எல்), ஜவாஹிருல்லா (மமக), அருணாசலம் (மநீம), தி.வேல்முருகன் (தவாக), ஈஸ்வரன் (கொமதேக) ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

Facebook Comments Box