அமெரிக்கா 50% வரி விதிப்பு – ரூ.10 கோடி இறால் ஏற்றுமதி பாதிப்பு, ராமநாதபுரம் மீனவர்கள் கவலை

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் தினசரி ரூ.10 கோடி மதிப்பிலான இறால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என அங்குள்ள மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரி உயர்வு அறிவித்துள்ளார். இதன் விளைவாக இந்தியாவின் ஏற்றுமதிக்கு மொத்தத்தில் 60.2 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என சர்வதேச வர்த்தக ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. இறால் ஏற்றுமதியும் இதில் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதால், ஏற்றுமதி நிறுவனங்கள் கவலையடைந்துள்ளன.

ஏற்கனவே இலங்கை கடற்படையின் தொந்தரவால் ராமேசுவரம் மீனவர்கள் சிரமத்தில் உள்ளனர். குறிப்பாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் விசைப்படகுகள் மூலம் இறால், நண்டு, கனவாய் போன்ற ஏற்றுமதி தர மீன்களைப் பிடிக்கும் பாரம்பரிய மீனவர்கள், புதிய வரி விதிப்பால் தங்களது தொழில் நிலைமை மேலும் மோசமடையும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து தேசிய பாரம்பரிய மீனவர்கள் சங்கத் தலைவர் சே. நல்லதம்பி தெரிவித்ததாவது:

“இந்த அதிக வரி காரணமாக அமெரிக்காவுக்கு இறால் ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்படும். நம் நாட்டின் இறால் ஏற்றுமதியில் 50 சதவீதம் அமெரிக்காவை சார்ந்துள்ளது. இதற்கு முன்பு 2.29% மற்றும் 5.77% வரி இருந்த நிலையில், ஆகஸ்ட் 28 முதல் 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறால் அரைபங்கு வரை குறையக்கூடும்.

ஏற்கனவே மீனவர்களுக்கு இறால் சரியான விலையில் விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் இந்த அதிக வரி அறிவிப்பு, விலையை மேலும் குறைக்கும். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால்களில் 80% பண்ணைகளில் வளர்க்கப்பட்டவை. அதில் பெரும்பாலானவை ஆந்திரா மாநில இறால் பண்ணைகளில் உற்பத்தியாகின்றன. இதனால் பண்ணை உற்பத்தியாளர்களும், பாரம்பரிய கடல் மீனவர்களும் பாதிக்கப்படுவர். வேலை வாய்ப்புகளும் குறைய வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தினமும் சுமார் 10 டன் இறால் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.10 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடக்கிறது. எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களுக்கு சரியான விலை கிடைக்கச் செய்ய வேண்டும். அதோடு, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Facebook Comments Box