இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 50% வரி தாக்கம் : பெப்சி, கோக், கேஎப்சிக்கு புறக்கணிப்பு

அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி காரணமாக, பெப்சி, கோககோலா, மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி போன்ற அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை இந்தியர்கள் புறக்கணிக்க தொடங்கியுள்ளனர்.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதாகக் கூறி, இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இது உலக நாடுகளில் எவருக்கும் விதிக்கப்படாத மிக அதிக வரியாகும். இதனால் இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக இந்தியர்களிடையே அமெரிக்காவுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு உருவாகியுள்ளது. குறிப்பாக, பெப்சி, கோககோலா, சப்வே, மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி போன்ற அமெரிக்க பொருட்களை மக்கள் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதைப் பற்றி யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது:

“பெப்சி, கோககோலா, சப்வே, கேஎப்சி, மெக்டொனால்ட்ஸ் போன்ற கடைகளுக்கு எந்த இந்தியரும் செல்வது தவறு. இந்த பிராண்டுகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும். அப்படி நடந்தால், அமெரிக்காவுக்கு மிகப்பெரிய இழப்பு உண்டாகும்” என்றார்.

மேலும், இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக வளர வேண்டும் என்றால், இந்தியர்கள் உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அமெரிக்காவின் அதிக வரி காரணமாக பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளும் ஏற்கெனவே அமெரிக்க தயாரிப்புகளை தவிர்த்து வருகின்றன. இந்நிலையில், 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவும் புறக்கணிப்பில் ஈடுபட்டால், அமெரிக்க நிறுவனங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும்.

மேற்கும் தெற்குமாக மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை நடத்திவரும் வெஸ்ட்லைப் புட்வேர்ல்டு கடந்த நிதியாண்டில் ரூ.2,390 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 5% அதிகமாகும்.

அதேபோல, பெப்சிகோ நிறுவனம் ரூ.8,200 கோடி வருவாய் பெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், இந்நிறுவனம் இந்தியாவில் ரூ.3,500 கோடி முதலீடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box