வரலாறு படைக்கும் தங்க விலை: பவுன் ரூ.77 ஆயிரம் கடந்தது – கிராம் ரூ.10 ஆயிரம் நெருங்கியது
சென்னையில் தங்க விலை ஒரே நாளில் ரூ.680 உயர்ந்து, பவுனுக்கு ரூ.77 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன் மூலம் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தங்கம் தொட்டுள்ளது. திடீர் உயர்வு நகை வாங்குவோருக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
சர்வதேச பொருளாதார சூழ்நிலை, அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு குறைதல் போன்றவை தங்க விலை ஏற்றத்துக்கு காரணமாகின்றன. பங்கு சந்தை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான விருப்பமாக தங்கத்தில் பணத்தை செலுத்தி வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலையும் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது.
கடந்த ஜனவரி மாத ஆரம்பத்தில் பவுன் தங்கம் ரூ.58,000 மட்டுமே இருந்தது. பின்னர் போர் பதற்றம் உள்ளிட்ட சூழ்நிலையால் விலை அதிகரித்து, ஆகஸ்ட் 8-ம் தேதி பவுனுக்கு ரூ.75,760-ஐ எட்டியது. அதன் பின் சிறு ஏற்ற, இறக்கங்கள் இருந்தபோதிலும், ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் விலை தொடர்ந்து உயர்ந்து, ஆகஸ்ட் 29-ம் தேதி வரலாற்றில் முதன்முறையாக ரூ.76,000-ஐ கடந்தது.
அதன் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் ரூ.76,960-ல் நிலைத்திருந்த தங்கம், நேற்று மீண்டும் உயர்ந்து பவுனுக்கு ரூ.77,640-க்கு, கிராமுக்கு ரூ.9,705-க்கு விற்பனையானது. அதாவது, ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680, கிராமுக்கு ரூ.85 உயர்ந்தது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.84,696-க்கு விற்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பவுனுக்கு ரூ.75,120 இருந்த நிலையில், வெறும் 5 நாட்களில் ரூ.2,520 உயர்ந்துள்ளது.
விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, நகை வாங்க விரும்புபவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதே நேரத்தில், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.136-க்கும், கிலோ பார் வெள்ளி ரூ.2,000 அதிகரித்து ரூ.1.36 லட்சத்துக்கும் விற்பனையானது. இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த கூடுதல் வரி மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை தங்க விலை வரலாறு காணாத உயர்வை எட்டச் செய்த முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.